பீகாருக்கும் தமிழகத்துக்கும் பிரச்னையை ஏற்படுத்தும் பிரதமரின் பேச்சு மிகவும் மலிவானது: துரை வைகோ காட்டம்
திருச்சி: திருச்சியில் எம்பி துரை வைகோ நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தமிழ்நாட்டில் பீகார் மக்கள் கடுமையாக உழைக்கிறார்கள். அவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. யாரும் அவர்களை தாக்கவில்லை. ஜாதி, மதம், அரசியல் எல்லைகளை கடந்து பிரதமர் செயல்படவும், பேசவும் வேண்டும். ஆனால் பீகாரில் பிரதமர் பேசி இருப்பது பீகாருக்கும் தமிழ்நாட்டிற்கு இடையே பிரச்சனை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. அவர் பேச்சு மலிவானது, கண்டனத்திற்குரியது. தமிழ்நாட்டிற்கு எதிராக செயல்படும் பீகாரியான கவர்னர் ஆர்.என்.ரவி தான் தமிழ்நாட்டு மக்களின் கருத்து தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளார்.
அதிமுகவிலிருந்து செங்கோட்டையன் நீக்கப்பட்டிருப்பது அவர்களின் உட்கட்சி பிரச்னை. அதில் நாங்கள் கருத்து கூற முடியாது. கொடநாடு கொலை கொள்ளை விவகாரம் நீதிமன்றத்தில் உள்ளது. அதில் யார் குற்றவாளி என்பதை நீதிமன்றம் தான் கூறும். சீமான் - வைகோ சந்தித்தது மரியாதை நிமித்தமான சந்திப்பு. சீமான் பெரியாரையும், அண்ணாவையும், திராவிட இயக்கத்தையும் கொச்சைப்படுத்தி பேசுவதில் எங்களுக்கு எந்தவித உடன்பாடும் கிடையாது. இவ்வாறு அவர் கூறினார்.