பீகார் படுதோல்வியின் மூலம் மக்களை விட்டு வெகு தூரம் சென்று விட்டது காங்கிரஸ்: பாஜ தேசிய மகளிர் அணி தலைவர் பேட்டி
சென்னை: சென்னை தி.நகரில் உள்ள பாஜ தலைமை அலுவலகத்தில் பாஜ மகளிர் அணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் எம்எல்ஏ நேற்று அளித்த பேட்டி: வளர்ச்சி பணிகளுக்கு பீகார் மக்கள் அங்கீகாரம் கொடுத்துள்ளார்கள். பெண்கள் என்டிஏ கூட்டணிக்கு பிரதமர் மீது அன்பு வைத்து வாக்களித்துள்ளார்கள். வேலைவாய்ப்பை இளைஞர்கள் எதிர்பார்க்கிறார்கள். அதை பாஜ அரசு தான் தர முடியும் என்று நினைக்கிறார்கள்.
அதற்காகவே வாக்களித்தார்கள். தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்கம் உள்ளிட்ட 5 மாநில தேர்தலில் பீகார் தேர்தல் முடிவுகள் எதிரொலிக்கும். தமிழகத்திலும் எங்களுக்கு இதுபோன்று வெற்றி கிடைக்கும். கூட்டணியில் பல கட்சிகள் வரும். பீகார் போன்ற தேர்தல் முடிவு தமிழகத்தில் வரும். பீகாரில் மகளிர் அணி மிகச் சிறப்பான முறையில் தேர்தல் பணியாற்றினார்கள். நானும் தேர்தல் பணிக்கு சென்றிருந்தேன்.
மகளிர் அணிக்கு பாராட்டுகள். பெண்கள் அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்துவார்கள் என்பதை நிரூபித்து விட்டார்கள். தமிழகத்திலும் பெண்கள் பாதுகாக்க வேண்டும் என்றால் தேசிய ஜனநாயக கூட்டணி வேண்டும் என்று பெண்கள் நினைத்து விட்டார்கள். எனவே பாஜ அணிக்கு தான் அவர்கள் வாக்களிப்பார்கள். காங்கிரஸ் கட்சி பீகாரில் துடைத்தெறிய பட்டு விட்டது.
தமிழகத்திலும் காங்கிரஸ் விரைவில் துடைத்தெறியப்படும். தோல்விக்கு ராகுல் காந்தி தான் காரணம் இல்லை. ராகுல் காந்தி பிரசாரத்தை மக்கள் ஏற்கவில்லை. மக்களை விட்டு காங்கிரஸ் கட்சி வெகு தூரத்துக்கு சென்று விட்டது. மீண்டும் அவர்கள் வர முடியாது. தேர்தல் நிபுணர்கள் எல்லாரும் தேர்தலில் வெற்றி பெற முடியாது என்பதை பீகார் தேர்தல் முடிவு காட்டி இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
