Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஆட்சி அமைக்கப்போவது யார்?.. பீகார் பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது

பாட்னா: பீகார் பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது. 243 தொகுதிகள் கொண்ட பீகாரில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடக்கிறது. அங்கு கடந்த 6, 11 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடந்தது. ஆளும் தே.ஜ. கூட்டணியில் ஐக்கிய ஜனதா தளம், பாஜ தலா 101 தொகுதிகள், லோக் ஜன சக்தி-ராம் விலாஸ்-29, ராஷ்டிரிய லோக் மோர்ச்சா 6, இந்துஸ்தானி அவாமி மோர்ச்சா 6 தொகுதிகளில் போட்டியிட்டன. இந்தியா கூட்டணியில் ராஷ்டிரிய ஜனதா தளம் 143, காங்கிரஸ் 61, இந்திய கம்யூனிஸ்ட்-எம்எல் 20, விஐபி 15, இந்திய கம்யூனிஸ்ட் 9, மார்க்சிஸ்ட் 4 தொகுதிகளில் களம் கண்டன.

தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ், ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி, பகுஜன் சமாஜ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் தனித்தனியாக போட்டியிட்டன. நடந்து முடிந்த இரு கட்ட தேர்தலிலும் வரலாறு காணாத அளவுக்கு வாக்குப்பதிவாகி உள்ளது. 121 தொகுதிகளுக்கு கடந்த 6ஆம் தேதி நடந்த முதற்கட்ட தேர்தலில் 65 சதவீத வாக்குகள் பதிவான. 122 தொகுதிகளுக்கு 11ஆம் தேதி நடந்த 2ம் கட்டதேர்தலில் 68.8 சதவீத வாக்குகள் பதிவாகின. இதனால் பீகாரில் இதுவரை இல்லாத வரலாற்று சாதனையாக மொத்தம் 67.13 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது. பீகாரில் ஆட்சியமைக்க 122 இடங்கள் தேவைப்படும் நிலையில், முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான தேசியஜனநாயக கூட்டணிக்கு 140க்கும் மேற்பட்ட இடங்கள் கிடைக்கும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் தெரிவித்துள்ளன.

இந்த நிலையில் பீகார் சட்டப்பேரவையில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது. பீகார் முழுவதும் உள்ள 38 மாவட்டங்களில் மொத்தம் 46 வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. முதலில் தபால் ஓட்டுகளை எண்ணும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதை தொடர்ந்து மின்னணு இயந்திர வாக்குகளும் எண்ணப்பட உள்ளன. இதையொட்டி வாக்கு எண்ணிக்கை நடக்க இருக்கும் மையங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. துணை ராணுவ வீரர்கள், உள்ளூர் போலீசார் உள்ளிட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வாக்கு எண்ணிக்கை தொடங்கிய சில மணி நேரங்களிலேயே முன்னணி நிலவரம் தெரிந்துவிடும்.

பகல் 12 மணி அளவில் பீகாரில் புதிய ஆட்சி அமைப்பது யார் என்பது தெளிவாக தெரிந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் நாடு முழுவதும் பீகார் தேர்தல் முடிவை ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கிறது.