பீகார் சட்டப்பேரவை தேர்தல் எனக்கு இன்னொரு வாய்ப்பு கொடுங்கள்: வீடியோ வெளியிட்டு முதல்வர் நிதிஷ்குமார் உருக்கம்
பாட்னா: பீகார் சட்டப்பேரவை தேர்தலில் எனக்கு இன்னொரு வாய்ப்பு கொடுங்கள் என்று வீடியோ வெளியிட்டு முதல்வர் நிதிஷ்குமார் உருக்கமாக வேண்டுகோள் விடுத்தார். 243 உறுப்பினர்களைக் கொண்ட பீகார் சட்டமன்றத்திற்கு நவம்பர் 6 மற்றும் நவம்பர் 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. நவம்பர் 14 ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும். இதையடுத்து பீகார் முழுவதும் உச்சகட்ட பிரசாரம் நடக்கிறது. பிரதமர் மோடி, ராகுல்காந்தி ஆகியோர் பிரசாரம் செய்து விட்டு சென்றுள்ளனர்.
ஒன்றிய அமைச்சர் அமித்ஷா, ஜேபி நட்டா ஆகியோர் அங்கேயே தங்கி பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்கள். நேற்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி பீகார் சென்று பிரசாரம் மேற்கொண்டார். வத்ரா, பெகுசராய் மற்றும் ககாரியாவில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசினார். இதற்கிடையே பீகார் முதல்வர் நிதிஷ்குமார் நேற்று வீடியோ வெளியிட்டு வாக்கு சேகரித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
2005 இல் நாங்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன்பே பீகாரின் நிலைமையை மக்கள் அறிந்திருந்தனர். சட்டம் ஒழுங்கை மீட்டெடுப்பதற்கும், மாநிலத்தில் சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டுவதற்கும் நாங்கள் முன்னுரிமை அளித்தோம். இப்போது, பீகாரியாக இருப்பது மாநிலவாசிகளுக்கு பெருமை சேர்க்கும் விஷயம். பெண்கள், இந்துக்கள், முஸ்லிம்கள், உயர் சாதியினர், தலித்துகள் மற்றும் சமூகத்தின் பலவீனமான பிரிவு மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை அதிகாரப்படுத்துவதற்காக எனது அரசாங்கம் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
இந்த முயற்சிகள் மேலும் தொடரும். ஒன்றிய அரசும், மாநில அரசும் தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைமையில் நடப்பதன் காரணமாக பீகார் துரிதமான வளர்ச்சியை கண்டுள்ளது. அது மேலும் தொடர வேண்டும். எனவே, பிரதமர் மோடியின் ஆதரவுடன் இரட்டை இயந்திர அரசாங்கம் எடுத்த வளர்ச்சி நடவடிக்கைகளைத் தொடர தேசிய ஜனநாயக கூட்டணிக்கு நீங்கள் மற்றொரு வாய்ப்பை வழங்க வேண்டும்.
தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வந்தால், பீகார் விரைவான வளர்ச்சியைக் காணும். நான் எனது குடும்பத்திற்காக எதுவும் செய்யவில்லை. பீகாரின் வளர்ச்சி எப்போதும் எனது முன்னுரிமையாக இருந்து வருகிறது. எனவே உங்களுக்கு சேவை செய்ய எங்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்க வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
* இரட்டை எஞ்சின் அரசு இல்லை எல்லாம் டெல்லி கன்ட்ரோல் தான்: பிரியங்கா காந்தி ஆவேசம்
பீகார் சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு முதல்முறையாக அங்கு பிரசாரம் மேற்கொண்ட காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கூறியதாவது: வாக்களிக்கும் உரிமை என்பது இந்திய அரசியலமைப்பின் மிகப்பெரிய ஆசீர்வாதம். ஆனால் மோடி அரசு சிறப்பு தீவிர திருத்தம் நடத்துவதன் மூலம் மக்களின் வாக்களிக்கும் உரிமையை பலவீனப்படுத்தியுள்ளது. பீகார் மாநிலத்தில் மட்டும் வாக்காளர் பட்டியலில் இருந்து 65 லட்சம் வாக்காளர்களை நீக்கியுள்ளனர். பீகாரில் இரட்டை எஞ்சின் அரசு இல்லை. ஆனால் ஒரே ஒரு எஞ்சின் மட்டுமே உள்ளது.
அனைத்தும் டெல்லியில் இருந்து கட்டுப்படுத்தப்படுகிறது. உங்கள் முதல்வர் நிதிஷ் குமாரும் மதிக்கப்படுவதில்லை. வாக்காளர்களின் பெயர்களை நீக்குவது மக்களின் உரிமைகளை மீறுவதற்குச் சமம். அவர்கள் முதலில் மக்களைப் பிரித்தனர். இருப்பினும் உண்மையான பிரச்சினைகளிலிருந்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்ப முடியவில்லை, எனவே அவர்கள் இப்போது வாக்குகளைத் திருடுகிறார்கள். தேசிய ஜனநாயக கூட்டணியின் உயர்மட்டத் தலைவர்கள் இங்கு வரும்போது என்ன பேசுகிறார்கள்? அவர்கள் 20 ஆண்டு கால ஆட்சி அல்லது எதிர்காலத்தை பற்றி பேசுவதில்லை.
அவர்கள் நேரு, இந்திராவை விமர்சிக்கிறார்கள். அவர்கள் வேலையின்மை, இடம்பெயர்வு போன்ற பிரச்சினைகளை எழுப்புவதில்லை. தொழிற்சாலைகளை யார் அமைத்தார்கள்? ஐஐடிகள் மற்றும் ஐஐஎம்களை நிறுவியது யார்? பதில் காங்கிரஸ் மற்றும் நேரு தான். ஆனால் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் தனியார்மயமாக்கல் பரவலாக இருப்பதாகக் கூறி பிரதமர் மோடி பெரிய பொதுத்துறை நிறுவனங்களை தனது நண்பர்களிடம் ஒப்படைத்தார். இவ்வாறு அவர் பேசினார்.
* நிதிஷ்குமார் தான் முதல்வர் வேட்பாளர் 160 இடங்களை நாங்கள் பிடிப்போம்: அமித்ஷா பேச்சு
பீகார் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதாதளம் தலைவருமான லாலுபிரசாத் யாதவின் சொந்த மாவட்டமான கோபால்கஞ்சில் நேற்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பிரசாரம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது: இந்தத் தேர்தல் பீகாரின் எதிர்காலத்தை யாரிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்க ஒரு வாய்ப்பாகும். ஒருபுறம் காட்டு ராஜ்ஜியத்தை அறிமுகப்படுத்தியவர்கள். மறுபுறம், வளர்ச்சியைக் கொண்டு வந்த பிரதமர் மோடி மற்றும் முதல்வர் நிதிஷ் குமார் ஆகிய இருவரும் உள்ளனர். முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில் நாங்கள் தேர்தலை சந்திக்கிறோம்.
எங்கள் கூட்டணி 160 இடங்களை பிடிக்கும். பீகார் மாநிலத்தில் உள்ள243 தொகுதிகளில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையை பிடித்து எங்கள் கூட்டணி ஆட்சி அமைக்கும். ராகுல் காந்தி எவ்வளவு வேண்டுமானாலும் யாத்திரை மேற்கொள்ளட்டும். ஒவ்வொரு ஊடுருவல்காரரும் நாட்டிலிருந்து விரட்டியடிக்கப்படுவார்கள். வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப்பணிகளை நாடு முழுவதும் மேற்கொள்ளும் தேர்தல் ஆணையத்தின் முடிவை நாங்கள் வரவேற்கிறோம். இவ்வாறு பேசினார்.
* பீகாரில் மாற்றத்தை கொண்டுவர மக்கள் முடிவு செய்துவிட்டனர்: தேஜஸ்வி யாதவ் நம்பிக்கை
இந்தியா கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் தேஜஸ்வியாதவ் நேற்று கூறுகையில்,’ பீகார் தேர்தலில் இந்தியா கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும். பிரச்சாரத்தில் நான் எங்கு சென்றாலும், மக்கள் மாற்றம் நிச்சயம் என்று கூறுகிறார்கள். பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் பீகாருக்கு வரும்போதெல்லாம், எதிர்க்கட்சிகளை காட்டாட்சி என்ற முத்திரையுடன் கேலி செய்கிறார்கள். அவர்களிடம் பேசுவதற்கு வேறு எந்தப் பிரச்சினையும் இல்லை.
நாங்கள் வளர்ச்சி மற்றும் தொலைநோக்குப் பார்வை பற்றிப் பேசுகிறோம். நிதிஷ் குமாருடன் தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணி அமைக்க வாய்ப்பு எதுவும் இல்லை. இதுபோன்ற வதந்திகளை நாம் நம்பக்கூடாது. தேர்தலுக்குப் பிறகு, அவரது கட்சியே இருக்காது. அவர் கட்சியிலிருந்து சிலர் பாஜவில் சேருவார்கள், பாதி பேர் ஆர்ஜேடிக்கு வருவார்கள்.
பீகாரின் முழு நிர்வாகமும் அமித் ஷாவால் கட்டுப்படுத்தப்படுகிறது. எனக்கு நிதிஷ் குமார் மீது அனுதாபம் இருக்கிறது. அவர் ஒரு இக்கட்டான கட்டத்தில் இருக்கிறார், அவரைப் பற்றி அதிகம் பேச எனக்குப் பிடிக்கவில்லை. பாஜ தலைவர்கள் அவரை நாசமாக்கிவிட்டார்கள். அதைவிட அதிகமாக, அவரது கட்சிக்குள் இருக்கும் பாஜவால் இயக்கப்படும் தலைவர்கள்தான் அதிக சேதத்தை ஏற்படுத்தியுள்ளனர்’ என்றார்.
* பீகார் தேர்தல் முடிவுகள் ஒன்றிய அரசின் அடித்தளத்தை அசைக்கும்: அகிலேஷ் யாதவ் பேச்சு
பீகார் மாநிலம் பூர்னியா மாவட்டத்தில் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ்யாதவ் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: பீகார் தேர்தல் முடிவுகள் மத்தியில் உள்ள பாஜ தலைமையிலான அரசாங்கத்தை உலுக்கும். அங்குள்ள அரசாங்கம் நீண்ட காலம் நீடிக்கப் போவதில்லை. பீகாரின் எதிர்காலத்தை மட்டுமல்ல, முழு நாட்டையும் மேம்படுத்துவது பீகார் மக்களின் பொறுப்பாகும்.
ஜிஎஸ்டி வரியை குறைத்து விட்டதாக கொண்டாடுகிறார்கள். ஆனால் இந்த வரி விகிதங்களை அதிகமாக நிர்ணயித்தவர்களும் அவர்கள் தான். அவர்கள் இப்போது பீகார் மக்களின் இடம்பெயர்வு பற்றிப் பேசுகிறார்கள், ஆனால் பீகாரில் இருந்து மக்கள் இடம்பெயர்வதற்கு பாஜவே பொறுப்பு. இந்த முறை பீகார் மக்கள் மாநிலத்திலிருந்து பாஜவின் இடம்பெயர்வை உறுதி செய்வார்கள் என்பதை தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் அறிந்து கொள்ள வேண்டும். மோடி அரசு உலக நட்புகளை இழந்து விட்டது ’ என்றார்.
