பீகார் தேர்தல் முடிவுகள்.. தேர்தல் களத்தில் புயலை கிளப்பிய இளம் வேட்பாளர் மைதிலி தாக்கூர்: யார் இவர்?
பாட்னா: பீகார் மாநில சட்டசபை தேர்தலில் மிகவும் பயன்படுத்தப்பட்ட ஒரு பெயர்தான் மைதிலி தாக்கூர். பீகாரின் நட்சத்திர வேட்பாளர்களில் ஒருவர். பாஜகவின் இளம் வயது வேட்பாளர். அரசியல் பயணத்தில் தன்னுடைய முதல் இன்னிங்ஸ்லியே பீகார் மட்டுமல்ல ஒட்டுமொத்த நாட்டின் கவனத்தை ஈர்த்த ஒரு வேட்பாளர் மைதிலி தாக்கூர். கட்சியில் மூத்தவர்கள் பலர் இருக்கும் போது பாஜக மைதிலி தாக்கூருக்கு அலிநகரில் போட்டியிட வாய்ப்பு தந்தது. பீகாரின் தர்பங்கா மாவட்டத்தில் உள்ள அலிநகர் தொகுதி இதன் மூலம் நட்சத்திர அந்தஸ்து பெற்றது.
பீகார் மாநிலத்தை சேர்ந்த பிரபல நாட்டுப்புற பாடகி தான் மைதிலி தாக்கூர், இந்தி, மைதிலி, போஜ்புரி உள்ளிட பல்வேறு மொழிகளில் பாடல்களை பாடி பீகார் மாநில மக்களிடையே பிரபலமானவர். தமிழ் மொழியில் கூட இவர் பாடல் பாடி வீடியோக்களை வெளியிட்டு தமிழ்நாட்டு மக்களின் கவனத்தையும் பெற்று இருக்கிறார். பீகாரின் கிராமப்புறங்களை சேர்ந்த மக்களிடம் மைதிலி தாக்கூருக்கு வரவேற்பு அதிகம்.
இந்த சூழலில் தான் அவருடைய இந்த பிரபலத்தை பாஜக இந்த தேர்தலில் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது . இந்த தேர்தலிலேயே பாஜகவின் இளம் பெண் வேட்பாளர் மைதிலி தாக்கூர் தான். 25 வயதான நபர், கட்சியில் இணைந்த ஒரே நாளில் வேட்பாளராக உயர்ந்தார் . இது பீகார் மாநில அரசியலில் ஒரு புதிய பாய்ச்சலை ஏற்படுத்தியது என்றே கூறலாம்.
பாஜகவின் கலாச்சார பிரிவு நிர்வாகியாகவும் பொறுப்பு வழங்கி மைதிலி தாக்கூரை உற்சாகப்படுத்தியது பாஜக. அலி நகர் தொகுதியில் இவர் ஆர்ஜேடி கட்சியை சேர்ந்த 63 வயதான பினோஜ் மிஸ்ராவை எதிர்த்து களம் கண்டார். 63 வயதான அரசியல்வாதியை எதிர்க்கும் 25 வயது இளம்பெண் என நாடு முழுவதும் புகழ் பெற்றார். அலிநகரில் இருந்து 35 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் மதுபானி மாவட்டத்தை சேர்ந்தவர் தான் மைதிலி தாக்கூர். இவரும் இவருடைய சகோதரர்கள் ரிஷவ் மற்றும் அய்யாச்சி ஆகியோரும் பீகார் மாநில பாரம்பரிய பாடல்களை பாடி மக்களிடையே பிரபலமடைந்தனர். சமூக ஊடகங்களிலும் இவருக்கு ரசிகர்கள் அதிகம். பீகார் மாநில மக்கள் இவரை தங்கள் மாநிலத்தின் ஒரு கலாச்சார அடையாளமாகவே பார்த்தனர்.
சமூக ஊடக பிரபலம் , கலாச்சார அடையாளம் ஆகியவை இந்த தேர்தலில் இளம் வயது மைதிலி தாக்கூருக்கு பெரிய வாய்ப்பை தந்திருக்கிறது . தேர்தல் முடிவுகளும் இவருக்கு சாதகமாகவே இருக்கின்றன. சமூக ஊடக பயன்பாடு அதிகரித்திருப்பது, ஜென் ஸீ வாக்காளர்கள் எண்ணிக்கை உயர்ந்திருப்பது எனம் காலம் மாறி வருவதால் வரும் காலங்களில் பல்வேறு மாநில தேர்தலிகளிலும் இது போன்ற இளம் புயல்களை அதிகம் காணலாம்.