பூடானின் காலசக்ரா அதிகாரமளித்தல் விழா: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
திம்பு: பூடானில் காலசக்ரா அதிகாரமளித்தல் விழாவைஅந்நாட்டு மன்னருடன் சேர்ந்து பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார். பூடானில் உலகளாவிய அமைதி பிரார்த்தனை விழா நடைபெற்று வருகின்றது. இதனையொட்டி புத்த மதத்தை சேர்ந்த ஏராளமானவர்கள் பூடானில் திரண்டுள்ளனர். இதனையொட்டி பிரதமர் மோடி இரண்டு நாள் அரசு முறை பயணமாக பூடான் சென்றிருந்தார். பூடானில் நடந்து வரும் உலகளாவிய அமைதி பிரார்த்தனையின் ஒரு பகுதியாக நேற்று காலசக்ரா அதிகாரமளித்தல் விழா தொடங்கியது. அந்நாட்டின் மன்னர் ஜிக்மே கேசர் நம்கியேல் வாங்சக் மற்றும் முன்னாள் மன்னர் ஜிக்மே சிங்யே வாங்சக் ஆகியோருடன் சேர்ந்து பிரதமர் நரேந்திரமோடி விழாவை தொடங்கி வைத்தார்.
இது குறித்து பிரதமர் மோடி தனது சமூக வலைதள பதிவில், ‘‘இது உலகெங்கிலும் உள்ள புத்த மதத்தை சேர்ந்தவர்களுக்கு ஒரு முக்கியமான சடங்காகும். காலசக்ர அதிகாரமளித்தல் என்பது பூடானுக்கு பக்தர்களையும், அறிஞர்களையும் ஒன்றிணைத்த தற்போதைய உலகளாவிய அமைதிய பிரார்த்தனை விழாவின் ஒரு பகுதியாகும். பூடான் மன்னர், முன்னாள் மன்னருடன் இணைந்து இதனை தொடங்கி வைக்கும் பெருமை எனக்கு கிடைத்தது. இதற்கு புனித ஜெ கென்போ தலைமை தாங்கினார். இது இன்னும் சிறப்பானதாக அமைந்தது” என்று குறிப்பிட்டு இருந்தார்.