வயது என்பது மனிதர்களின் உடலுக்குத் தானே தவிர, அவர்களின் மனதிற்கும் கனவுகளுக்கும் அல்ல என்பதை உலகிற்கு உரக்கச் சொல்லியுள்ளார் 97 வயதான மூதாட்டி பெட்டி புரோமேஜ்.
ஐக்கிய ராஜ்யத்தில் உள்ள செல்டென்காம் நகரைச் சேர்ந்த இவர், தனது 97வது வயதில் விமானத்தின் இறக்கையின் மீது நின்று பறந்து புதிய உலக சாதனையைப் படைத்துள்ளார். பொதுவாக இந்த வயதில் பலர் நடக்கவே சிரமப்படுவார்கள்;
ஆனால், பெட்டி அவர்களோ 3,000 அடி உயரத்தில், மணிக்கு 150 மைல் வேகத்தில் கிழித்துச் செல்லும் ஒரு சிறிய ரக விமானத்தின் மேல் கட்டப்பட்ட நிலையில் நின்றபடி பயணம் செய்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். சாதாரண மனிதர்கள் பாதுகாப்பாக விமானத்தின் உள்ளே அமர்ந்து பயணிக்கவே பயப்படும் நிலையில், இவர் திறந்த வெளியில், பலத்த காற்றை எதிர்த்து நின்றபடி இந்தச் சாகசத்தைச் செய்துள்ளார். அதுமட்டுமின்றி, இந்தப் பயணத்தின் போது வானில் பல சாகச சுழற்சிகளையும் செய்து அசத்தியுள்ளார்.
பெட்டிக்கு வானில் நடக்கும் இந்தச் சாகசப் பயணம் புதிதல்ல. தனது 87-வது வயதில்தான் அவர் முதன்முதலாக விமானத்தின் இறக்கையில் ஏறி நின்றார். தற்போது ஆறாவது முறையாக இந்தச் சாதனையை வெற்றிகரமாகச் செய்து முடித்துள்ளார். இதற்கு முன்பு 2022-ஆம் ஆண்டில் அவருக்கு 93 வயதாக இருந்தபோது, உலகிலேயே மிக வயதான பெண் விங் வாக்கர் என்ற கின்னஸ் உலக சாதனையைத் தன் வசமாக்கினார்.
தற்போது வேறு யாரும் அந்தச் சாதனையை நெருங்குவதற்கு முன்பே, தன் சாதனையைத் தானே முறியடித்து, உலக சரித்திரத்தில் தன் பெயரை அழிக்க முடியாதபடி பதிவு செய்துள்ளார். குறைந்த பார்வைத் திறன், கழுத்துப் பகுதியில் உள்ள மூட்டுவலி போன்ற உடல்நலக் குறைபாடுகள் மற்றும் வயது முதிர்வு எனப் பல நடைமுறைத் தடைகள் அவருக்கு இருந்தபோதிலும், அவர் தனது அசைக்க முடியாத மனஉறுதியால் அவை அனைத்தையும் தவிடுபொடியாக்கியுள்ளார்.
தன்னுடைய சொந்த சந்தோஷத்திற்காகவோ அல்லது புகழுக்காகவோ மட்டும் அவர் இந்தச் சாகசத்தை மேற்கொள்ளவில்லை. இதற்குப் பின்னால் ஒரு நெகிழ்ச்சியான காரணமும் உள்ளது. சில காலங்களுக்கு முன்பு பெட்டி பக்கவாதத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, செல்டென்காம் பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அந்த இக்கட்டான சூழலில், தனக்குச் சிறப்பான முறையில் சிகிச்சை அளித்து மறுவாழ்வு கொடுத்த மருத்துவர்களுக்கும், செவிலியர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாகவே இந்தச் சாகசப் பயணத்தை அவர் மேற்கொண்டுள்ளார். மேலும், அந்த மருத்துவமனையின் பக்கவாத சிகிச்சைப் பிரிவின் மேம்பாட்டிற்காக நிதி திரட்டுவதும் அவரது முக்கிய நோக்கமாக இருந்தது.
வயது மற்றும் உடல் சவால்கள் ஒருபோதும் ஒருவரின் லட்சியத்தைக் கட்டுப்படுத்தக்கூடாது என்ற மாபெரும் செய்தியைத் தனது செயலின் மூலம் பெட்டி உலகிற்குத் தெளிவுபடுத்தியுள்ளார். இது மட்டுமின்றி, தொடர்ந்து ஜிப்-லைனிங், அப்ஸைலிங் போன்ற பல ஆபத்தான சாகச விளையாட்டுகளிலும் அவர் ஈடுபட்டு வருகிறார். தன் உயிரைப் பணயம் வைத்து, மற்றவர்களுக்கு உதவும் உயரிய நோக்கத்தில் அவர் செய்த இந்தச் சாதனை, தன்னம்பிக்கைக்கும் விடாமுயற்சிக்கும் மிகச்சிறந்த உதாரணமாகத் திகழ்கிறது.
பெட்டி புரோமேஜ் ஒரு சாதனையாளர் மட்டுமல்ல, உலகெங்கிலும் உள்ள ஒவ்வொரு மனிதனுக்கும் மிகப்பெரிய உந்துசக்தியாகவும் வாழும் உதாரணமாகவும் திகழ்கிறார்.
- ஆ.கவின்



