தேனிக்காரர் அதிருப்தியாளர்களை கூண்டோடு அள்ள திட்டம் போடும் இலை தரப்பை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா
‘‘ஸ்டார் காக்கி டிரான்ஸ்பர் எதுக்காம்..’’ என்று கேட்டபடி வந்தார் பீட்டர் மாமா.
‘‘வடக்கு மண்டலத்துல காக்கிகள் உயர் அதிகாரி சாட்டைய சுழற்றி வர்றாரு. இதுல குயின்பேட்டை பக்கம் சாட்டைய சுழற்றி இருக்குறாரு. சமீபத்துல குயின்பேட்டை மாவட்டத்தில் வா என்று தொடங்கி பேட்டையில முடியும் நகரத்துல, காக்கிகள் ஸ்டேஷன்ல, பெயர்ல ராஜாவை கொண்ட தனிப்பிரிவு காக்கி பணிபுரிஞ்சு வந்தாரு. இவரு அந்த பேட்டை நகரத்துல நடக்குற குற்ற சம்பவங்களை, உளவு பார்த்து முன் கூட்டியே மேலிடத்துக்கு தகவல் சொல்றதே இல்லையாம்.
சில நாளுக்கு முன்னாடி அந்த பேட்டை நகரத்தோட ஸ்டார் காக்கியை பணியிட மாற்றம் செய்திருக்காங்க. ஸ்டார் காக்கி என்ன காரணத்துக்காக பணியிடமாற்றம் செய்தார்கள்னு கூட மாவட்ட காக்கிக்கு தகவல் சொல்லவே இல்லையாம். இப்படி எந்த தகவலையும் சொல்லாததால, தனிப்பிரிவு வேலையில இருந்தே அவரை தூக்கிட்டாங்களாம். தனிப்பிரிவு காக்கி டிரான்ஸ்பர் மேட்டர் தான் இப்போ குளிரிலும் ஹாட்டாக போய்கிட்டிருக்குது..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘ கொசுவலை சட்டமன்ற தொகுதியில் போட்டியிட அதிரடியில் இறங்கியிருக்கும் மலராத தாமரை கட்சியினர்’’
‘‘கொசுவலை மாவட்டத்தில் மலராத தாமரை கட்சி வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட முடிவு செய்திருக்காங்க. இதற்கான வேலைகள் ரகசியமாக நடந்து வருகிறதாம். சட்டமன்ற தேர்தலுக்காக முக்கிய நிர்வாகி கூட களத்தில் இறங்க முடிவு செய்துள்ளாராம். இந்த தகவல் தெரிய வந்த இலை கட்சி மாஜி அமைச்சர், தனது ஏரியாவில் எனக்கு தெரியாமல், என்னை மீறி களத்தில் இறங்குவதா. அவரை தொகுதியில் கால் வைக்க விட மாட்டேன் என அவரது நெருங்கிய ஆதரவாளர்களிடம் மாஜி அமைச்சர் பேசிருக்காரு. ஆனால், மலராத தாமரை கட்சி நிர்வாகிகள், மாஜி அமைச்சரை கண்டு கொள்ளாமல், நேரிடையாக தலைமையிடம் பேசி கொசுவலை சட்டமன்ற தொகுதியை வாங்கி விடலாம் என்ற நம்பிக்கையில் இருக்கங்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘தேனிக்காரர் ஆதரவாளர்கள் வருத்தத்தில் இருக்காங்களாமே..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘பலாப்பழக்காரரின் ஆதரவாளர்கள் பயங்கர கலக்கத்தில் இருக்கிறார்களாம். இலையுடன் இணைப்பு என்று நீண்டகாலமாக கூறி வந்த பலாப்பழக்காரர் திடீரென அவர்களுடன் ஒட்டும் இல்லை உறவும் இல்லை என கூறியதால் ஹனிபீ மாவட்டத்தைச் சேர்ந்த அவரது ஆதரவாளர்கள் பதற்றமடைந்துள்ளனராம். இலைக்கட்சி, மலராத கட்சி கூட்டணியில் இடம் பிடித்து மீண்டும் இரண்டெழுத்து தொகுதியில் பலாப்பழக்காரர் போட்டியிடுவார், நமக்கும் வேலை இருக்கும், கையில் கொஞ்சம் பணமும் புரளும், நமது அரசியல் இருப்பையும் காட்டிக் கொள்ளலாம் என்ற நினைப்பில் இருந்தவர்களுக்கு இலையுடன் கூட்டணி கிடையாது என தடாலடியாக அவர் கூறியது மிகுந்த வருத்தமடையச் செய்துள்ளதாம். இவர்களின் இந்த வருத்தத்தை சாதகமாக்கி கொள்ள நினைக்கும் இலைத் தரப்பினர், பலாப்பழ கும்பலை அப்படியே அலேக்காக தூக்கி தங்கள் அணிக்குக் கொண்டு வர தயாராகி வருகின்றனராம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘சட்டமன்ற தேர்தலால் போலி மருந்து விவகாரத்தை கிடப்பில் போட திட்டம் போட்டிருக்காங்களாமே..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘சின்னஞ்சிறிய மாநிலத்தில் தற்போது போலி மருந்து விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. போலி மருந்துக்களை தயாரித்து 16க்கும் மேற்பட்ட மாநிலங்களில் விற்பனை செய்து பல ஆயிரம் கோடி சம்பாதித்த முக்கிய குற்றவாளி ராஜா உள்ளிட்ட 20 பேரை சிறப்பு புலனாய்வு குழு போலீசார் கைது செய்துள்ளனர். இதில் திடீர் திருப்பமாக விருப்ப ஓய்வு பெற்ற ஐஎப்எஸ் அதிகாரியை சமீபத்தில் கைது செய்தனர். மேலும் ஒன்றிய அரசு அதிகாரி மற்றும் சுற்றுச்சூழல் அதிகாரியிடம் தீவிரமாக விசாரித்துவிட்டு அனுப்பிவிட்டனர். இதற்கிடையில் பவுர்புல் மனிதர், இவ்வழக்கு குறித்து விசாரிக்க சிபிஐக்கு பரிந்துரை செய்துள்ளார். இதனால் இவ்விவகாரம் ஆளும் பாஜ-என்ஆர் காங்கிரஸ் அரசுக்கு பெரும் குடச்சலை ஏற்படுத்தியதாம். இதையடுத்து டெல்லி மேலிடத்துக்கு பல்வேறு புகார்கள் சென்றதால் இதற்கான விவரங்களை கேட்டறிந்துவிட்டு இவ்வழக்கை தற்போதைக்கு கிடப்பில் போட உத்தரவு வந்துள்ளதாம். இதையடுத்து போலீஸ் உயரதிகாரி, சிறப்பு புலனாய்வு குழு போலீசாரிடம் ஒரு மணி நேரத்துக்கு மேல் நேற்று முன்தினம் பேசினாராம். அப்போது இவ்விவகாரத்தை சிபிஐ விசாரிக்க உள்ளது. எனவே பொலிட்டிகல் தவிர்த்து மற்ற விசாரணை மட்டும் நடத்த வேண்டும் என உத்தரவு வந்ததாம். இதனால் போலி மருந்து விவகாரம் இனிமேல் வேகம் எடுக்காது என்பதால் அரசியல் முக்கிய புள்ளிகள் நிம்மதி பெருமூச்சுவிட்டனர். ஆனால் எதிர்க்கட்சிகள் இவ்விவகாரத்தை மக்கள் மன்றத்தில் முறையீடு செய்யப்போவதாக அறிவித்துள்ளனர்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘மான்செஸ்டர் மாவட்டத்தில் இலைக்கட்சி எம்எல்ஏ வடக்கில் இருந்து தெற்கு தொகுதியை குறி வைத்துள்ளதாக சொல்றாங்களே.. உண்மையா..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘தமிழ்நாட்டில் மலராத கட்சி மாஜி தலைவர் வடக்கு தொகுதியில் நிற்க ஆசைப்படுகிறாராம். இதனால தன்னோட தொகுதி பறிபோகும் என்பதால் முன்கூட்டியே வேறு தொகுதியை தேர்வு செய்வது தான் புத்திசாலித்தனம் என்பதால் தெற்கு திசையை குறிவைக்க முயற்சித்து வருகிறாராம் இலைக்கட்சி எம்எல்ஏ. ஆனா குறி வைத்திருக்கிற தெற்கு தொகுதி சிட்டிங் எம்எல்ஏவாக இருப்பது தமிழ்நாட்டில் மலராத கட்சியின் தேசிய மகளிரணி தலைவியாம். சிட்டிங் தொகுதி பார்முலா படி தொகுதியை விட்டுக்கொடுக்க மகளிரணி தலைவி முன்வர வாய்ப்பு இல்லைன்னு சொல்றாங்க. ஆனா அதே வேளையில் சிட்டிங் தொகுதி தனக்கு சிக்கல் ஏற்படுத்தும் என்பதால் வடக்கு தொகுதியில் நிற்கலாம் என்ற யோசனையும் மகளிரணி தலைவிக்கு உள்ளதாம். அப்படி நின்றால் ஒரே கல்லில் 2 மாங்காவை அடிக்க முடியும்னு நினைக்கிறாங்க. ஒன்று அதிருப்தி ஓட்டுக்களில் இருந்து தன்னை காப்பாற்றிக்கொள்ளலாம். 2வது மாஜி தலைவர் வடக்கில் நிற்பதையும் தடுத்துவிடலாம் என்று நினைக்கிறாராம்.


