கால் எலும்பு முறிந்ததால் படுக்கையில் சிறுநீர், மலம் கழித்த தந்தை கத்தியால் குத்திக் கொலை: மனைவி திட்டிய ஆத்திரத்தில் போதை கணவன் வெறிச்செயல்
சென்னை: பெரவள்ளூர் வெற்றி நகர் நாகாம்பாள் தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன் (68). இவரது மகன் நடராஜன் (45), பெயின்டர். இவரது மனைவி எழிலா. ஜெயஸ்ரீ மற்றும் ராகுல் ஆகிய 2 பிள்ளைகள். ராஜேந்திரன் 20 நாளுக்கு முன்பு கீழே விழுந்து இடது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு வீட்டில் படுத்த படுக்கையாக இருந்தார். இந்நிலையில் நடராஜனின் மனைவி, இரண்டு பிள்ளைகள் வேளாங்கண்ணிக்கு இரு தினங்களுக்கு முன்பு சென்றுள்ளனர். நேற்று மதியம் 2 மணி அளவில் வீட்டிற்கு வந்தனர். அப்போது, நடராஜன் மது போதையில் வீட்டில் இருந்துள்ளார்.
அவரது தந்தை ராஜேந்திரன் படுக்கையில் சிறுநீர் மற்றும் மலம் கழித்த நிலையில் கிடந்துள்ளார். இததை பார்த்து கணவர் நடராஜனிடம், உங்கள் தந்தையை பார்த்துக் கொள்ள முடியாதா, வீட்டை இப்படி நாசம் செய்து உள்ளீர்களே என கேட்டுவிட்டு எழிலா தனது அறைக்குள் சென்று படுத்து உறங்கி விட்டார். சிறிது நேரத்தில் ராஜேந்திரனின் அலறல் சத்தம் கேட்டுள்ளது. உடனே எழிலா வெளியே ஓடிவந்து பார்த்தபோது ராஜேந்திரன் மார்பில் ரத்தம் சொட்ட சொட்ட கிடந்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த எழிலா, அவரது பிள்ளைகள் ராஜேந்திரனை பெரியார் நகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவர்கள் பரிசோதனையில் அவர் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். பிறகு இதுகுறித்து திருவிக நகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இன்ஸ்பெக்டர் பிரேம்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தியதில் மது போதையில் இருந்த நடராஜன், தனது மனைவி திட்டியதை மனதில் வைத்துக் கொண்டு, தந்தை படுக்கையில் மலம் மற்றும் சிறுநீர் கழிப்பதால்தான் இந்த பிரச்னை ஏற்படுகிறது என்று எண்ணி, வீட்டில் சமையல் அறையில் இருந்த கத்தியை எடுத்து வந்து கொலை செய்து விட்டால் பிரச்னை இருக்காது என்று எண்ணி அவரை சரமாரியாக கத்தியால் குத்தியது தெரிய வந்தது. தொடர்ந்து, நடராஜனை போலீசார் கைது செய்தனர்.



