Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஆகாயத் தாமரையில் அழகிய புடவைகள்!

குளம், ஏரி போன்ற நீர்நிலைகளில் அதிகமாக வளரும் ஆகாயத் தாமரைச்செடி பல ஆண்டுகளாக ஒரு பெரிய பிரச்சினையாகவே கருதப்படுகிறது. எப்படி நிலத்திற்கு கருவேல மரங்கள் எதிரியோ, அப்படி நீர்நிலைகளுக்கு மிகப்பெரும் எதிரி இந்த ஆகாயத் தாமரைச் செடிகள். இந்தச் செடி வேகமாகப் பரவி, நீரின் ஓட்டத்தைத் தடுத்து, மீன்கள் மற்றும் பிற நீர்வாழ் உயிரினங்களின் வாழ்வையும் பாதிக்கிறது. இதனால், பல இடங்களில் இந்தச் செடிகளை அகற்ற அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் அதிக செலவு செய்து வருகின்றன. ஆனால், இந்தப் பயனற்ற செடியைக்கொண்டு அழகான கைத்தறிச் சேலைகளைத் தயாரித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த இன்ஜினியர் மற்றும் தொழில்முனைவோர் கௌரவ் ஆனந்த்.

சுற்றுச்சூழல் பொறியாளரான கௌரவ் ஆனந்த், நீர்நிலைகளைச் சுத்தப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டபோது, ஆகாயத் தாமரைச் செடிகளை முழுமையாக அழிப்பதை விட, அவற்றைப் பயனுள்ள பொருளாக மாற்ற முடியுமா என்று சிந்தித்தார். பல்வேறு ஆய்வுகளுக்குப் பிறகு, இந்தச் செடியில் இருந்து நாரை எடுத்து, அதை பருத்தி நூலுடன் சேர்த்து துணி தயாரிக்க முடியும் என்பதைக் கண்டுபிடித்தார்.

பருத்தி போலவே நூல் எடுத்து , அதில் ஆடைகள் நெய்யும் அதே பாணிதான். ஆகாயத் தாமரைச் செடிகளைப் பறித்து, நன்கு காயவைத்து, அதிலிருந்து நாரை எடுத்து, சுத்தம் செய்து நூலாக மாற்றுகின்றனர். பின்னர் அந்த நூலைப் பருத்தியுடன் இணைத்து கைத்தறியில் சேலைகளாக நெய்கிறார்கள். இந்தச் சேலைகள் இயற்கையானதாக மட்டுமல்லாமல், தனித்துவமான தோற்றத்தையும் கொண்டுள்ளன.

இந்த முயற்சியால் சுற்றுச்சூழலுக்கு மட்டுமல்லாமல். கிராமப்புற மக்களுக்கும் வேலைவாய்ப்புகளை உருவாகியுள்ளது. நீர்நிலைகளில் இருந்து ஆகாயத் தாமரைச் செடிகளைச் சேகரிப்பது முதல், நாரைத் தயாரிப்பது மற்றும் கைத்தறியில் சேலை நெய்வது வரை பல்வேறு பணிகளில் உள்ளூர் மக்களை ஈடுபடுத்தி வருகிறார் கௌரவ். குறிப்பாக பெண்கள் மற்றும் பாரம்பரிய நெசவாளர்களுக்கு இது கூடுதல் வருமானத்தை ஏற்படுத்தி வருகிறது.

இன்றைய காலகட்டத்தில் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு இல்லாத பொருட்களைப் பயன்படுத்துவதில் மக்களின் ஆர்வம் அதிகரித்து வருகிறது. அதிலும் நிலைத்தன்மை கொண்ட இயற்கை புராடெக்ட்களுக்கு மக்கள் தயங்காமல் டிக் அடிக்கிறார்கள். மேலும் அதன் விலை குறித்தும் அதிகம் யோசிப்பதில்லை. அதேபோல், இயற்கை வளங்களை வீணாக்காமல், அவற்றைப் புதிய வடிவில் பயன்படுத்தும் முயற்சிகளும் முக்கியத்துவம் பெற்று வருகின்றன. அந்த வகையில், நீர்நிலைகளுக்கு ஆபத்தாகக் கருதப்பட்ட ஆகாயத் தாமரைச் செடியை மதிப்புமிக்க கைத்தறிச் சேலையாக மாற்றியுள்ள இந்த முயற்சி பலருக்கும் ஒரு முன்னுதாரணமாக அமைந்துள்ளது. விரைவில் கௌரவுடன் ஜர்கண்ட் அரசும் இணைந்து அவருக்கு பொரு ளாதார, மற்றும் இயந்திர ஆதரவும் விரைவில் வழங்கவிருக்கிறது.

ஒரு காலத்தில் அகற்றப்பட வேண்டிய களையாக இருந்த ஆகாயத் தாமரை, இன்று சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும், மக்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கவும், பாரம்பரிய கைத்தறித் தொழிலுக்கு புதிய சந்தையை ஏற்படுத்தவும் உதவி வருகிறது. பிரச்சினையாகத் தோன்றும் ஒரு விஷயத்தைக்கூட புதிய சிந்தனை யுடன் அணுகினால், அது சமூகத்திற்கும் சுற்றுச்சூழலுக்கும் பயனுள்ள வாய்ப்பாக மாறும் என்பதை இந்த முயற்சி நிரூபித்துள்ளது. மேலும் இந்த ஆகாயத் தாமாரை புடவைகள் வெளிநாடுகளிலும் ஏற்றுமதி செய்யப்பட்டுவருகிறது. உடன் இந்தியமுழுவதும் உள்ள நீர்நிலைகளையும் அதன் வாழ்வாதாரத்தை பாதிக்கும் ஆகாயத் தாமரை செடிகளின் வளர்ச்சியையும் கௌரவ் ஆராய்ந்து வருகிறார். விரைவில் கௌரவ் தன்னுடைய சொந்த முயற்சியால் இதனை இந்தியத்தொழிலாக மாற்ற வேண்டும் என்பதுதான் தனது கனவு என்கிறார்.

- ஆ.கவின்.