சென்னை: வெறும் கொடியேந்தி நிற்பவர்களல்ல; கொள்கையேந்தி வாழ்பவர்கள்தான் திமுகவினர் என்பதற்கு எடுத்துக்காட்டாகத் திகழும் மதிப்பிற்குரிய சோழவந்தான் காசி அவர்களைச் சந்தித்ததாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், தந்தை பெரியாரின் சிந்தனைகளால் ஈர்க்கப்பட்டு, முரசொலியைத் தனது அரசியல் பாடசாலையாகக் கொண்டு, சாதி மறுப்புத் திருமணத்தை மனமுவந்து வரவேற்று பெருமிதத்துடன் கொண்டாடிய காசி அவர்களின் கண்களில் கலைஞர் கருணாநிதியின் சிரிப்பைக் கண்டதாக நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கொள்கைகள் என்பவை மேடைகளில் பேசுவதற்கு மட்டுமல்ல; அவற்றை வாழ்க்கையில் கடைப்பிடித்து வாழ்ந்து காட்டுவதற்கும் என்பதை உணர்த்தும் இலட்சக்கணக்கான காசிகளைக் கொண்டதுதான் திராவிட முன்னேற்றக் கழகம் என்றும் தெரிவித்துள்ளார்.
உழைப்பாலும் தியாகத்தாலும் கழகத்தை வளர்த்தெடுத்த இத்தகைய தொண்டர்களின் வாழ்க்கையிலிருந்து, கழகத் தலைவர் என்ற முறையில் தாம் உட்பட தலைமை முதல் கடைக்கோடித் தொண்டர் வரை, மூத்த முன்னோடிகள் முதல் புதிதாகக் களம் காணும் இளைஞர்கள் வரை அனைவரும் கற்றுக்கொள்ள ஏராளமான பாடங்கள் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இறுதியாக, அன்புநிறை காசி அவர்களைச் சந்தித்து வழியனுப்பிய பின்னரும், அவருடனான உரையாடல் தனது உள்ளத்தில் தொடர்ந்து கொண்டிருப்பதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.


