Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பொறுப்பு வேண்டும்

உ ணவு, உடை, இருப்பிடம் போன்று, இன்று மனிதர்களின் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக இருப்பது மின்சாரம். ஒரு காலத்தில் இரவின் ஒளிக்காக மட்டுமே பிரதானமாக இருந்தது மின்சாரம். ஆனால், தற்போது சமையல் அறையில் தொடங்கி, சாப்ட்வேர் நிறுவனங்கள் வரை, அனைத்தும் தடையின்றி இயங்குவதற்கு மின்சாரம் தேவைப்படுகிறது. இதனால் தான், மின்விநியோகத்தை சீராக கொடுப்பதில் அனைத்து மாநில அரசுகளும் அதீத கவனம் செலுத்துகிறது.

இப்படிப்பட்ட நிலையில், தமிழகத்தில் 3 மாதங்களுக்கு முன்பு புதிதாக பொறுப்பேற்றது விஜய் தலைமையிலான தவெக அரசு. முதல்வராக பதவியேற்றவுடன் 3 முக்கிய கோப்புகளில் அவர் கையெழுத்து போட்டார். இதில் முக்கியமானது, 200 யூனிட் வரையிலான மின் பயன்பாடு மக்களுக்கு இலவசம் என்பதாகும். ஆனால் தற்போது வரை, இதில் ஒரு தெளிவில்லாத நிலையே நீடித்து வருகிறது. தமிழ்நாடு அரசு மின்வாரியத்தில் கடந்த மாதமும், நடப்பு மாதமும் மின் கட்டணம் செலுத்த வேண்டிய வாடிக்கையாளர்களில் பெரும்பாலானோருக்கு மிக அதிகப்படியான கட்டணம் வந்துள்ளது.

இதுதொடர்பாக, மாநிலம் முழுவதும் லட்சக்கணக்கான மின் நுகர்வோர்கள், மின்வாரிய அலுவலகங்களில் புகார்களை அளித்து வருகின்றனர். முந்தைய திமுக ஆட்சியில், வீட்டு மின் இணைப்பில் நுகரப்படும் மின்சாரத்தில் முதல் 100 யூனிட் இலவசம் என்றிருந்தது. இதனை தவெக அரசு வந்த பின், 500 யூனிட்டிற்குள் மின்சாரம் நுகரும் வாடிக்கையாளர்களுக்கு 200 யூனிட் இலவசம் என அறிவிக்கப்பட்டது. இதனால், முன்பு இருந்ததை விட, தற்போது மின் கட்டணம் வெகுவாக குறையும் என்றும், 200 யூனிட்டிற்குள் மின்சாரத்தை பயன்படுத்தும் நபர்களுக்கு கட்டணம் வராது என்றும் மக்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், அதற்கு மாறாக வழக்கமாக வரும் மின்கட்டணத்தை விட, அதிகமாக பெரும்பாலான நுகர்வோர்களுக்கு வந்துள்ளது. இது மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவும் கவனம் ஈர்த்துள்ளது. தமிழகத்தில் 3.70 லட்சம் குடும்பங்கள், கூடுதல் மின்கட்டணம் தொடர்பாக புகார் அளித்துள்ளனர். அரசே வேறு வழியின்றி இதை ஒப்புக்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. சமூக ஊடகங்களில் பொதுமக்களின் குமுறலை பார்க்கும் போது, மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, இன்னும் பல மடங்கு இருக்கும் என்பது உறுதியாகிறது. இந்த குளறுபடிகள் ஆய்வு செய்யப்பட்டு, தீர்வு காணப்படும் வரை மின்கட்டணம் செலுத்துவதற்கு காலஅவகாசம் வழங்க வேண்டும். இனி வரும் காலங்களில், மின்சார பயன்பாட்டை கணக்கெடுக்கும் ரீடிங் சரியான முறையில் மேற்கொள்ளப்பட வேண்டும். இதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

ஆனால், இதற்கு பொறுப்பாக பதில் அளிக்க வேண்டிய தமிழகத்தின் மின்சாரத்துறை அமைச்சரோ, வாட்ஸ்அப்பில் வரும் தகவலை வைத்து, திமுக தலைவர் சொல்கிறார். 3.70 லட்சம் பேரிடம் இருந்து புகார் வரவில்லை. அதற்கும் குறைவாகவே வந்துள்ளது. மின்கட்டணம் செலுத்துவதில் இருந்து, யாரும் விலக்கு கேட்கவில்லை என்று பொறுப்பற்ற முறையில் பதில் அளித்துள்ளார். 3 லட்சம் புகார்கள் தேவையில்லை. 300 புகார்கள் என்றால் கூட, அது மக்களின் குமுறல் தான். அலட்சியமாக இருந்தால், இந்த குமுறலின் எண்ணிக்கை 30 லட்சமாகவும் உயரும். எனவே, இதை உணர்ந்து ெசயல்படும் பொறுப்பு, மின்சாரத்துறை அமைச்சருக்கும், அவரை வழிநடத்தும் முதல்வருக்கும் நிச்சயம் வேண்டும் என்கின்றனர் நடுநிலையாளர்கள்.