Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பணியிடத்தில் உஷார்!

பணிபுரியும் இடத்தில் நாம் சந்தோஷமாக இருக்க, இந்த விதிகளைப் பின்பற்றினாலே போதும். நமக்கு எந்தவிதமான மன உழைச்சலுக்கும் வேலை இல்லை.

* யாரையும் நம்பாதீர்கள். ஆனால் எல்லோரையும் மதியுங்கள்.

* பணியிடத்தில் நடப்பதை அங்கேயே விட்டு விடுங்கள். பணியிடம் கிசுகிசுக்களை வீட்டிற்கோ அல்லது வீட்டின் கிசு கிசுக்களை பணியிடத்திற்கு சுமந்து வர வேண்டாம்.

* சரியான நேரத்திற்கு பணிக்கு வந்து அதே போல சரியான நேரத்திற்கு பணியிலிருந்து செல்லுங்கள்.

* நமது பணிக்கு தொடர்பில்லாத தேவையற்ற பேச்சுக்களை தவிருங்கள். அதனால் மோசமான பின்விளைவுகளையே சந்திக்க நேரிடும்.

* எதையுமே எதிர்பார்க்காதீர்கள். யாரும் உதவினால் நன்றியோடு இருங்கள். உதவாத பட்சத்தில் அக்காரியத்தை நீங்களே செய்து கொள்ளக் கற்பீர்கள்.

* பணியை மிகச் சிறப்பாக செய்யுங்கள். அதற்கு அங்கீகாரம் கிடைத்தால் வாழ்த்துக்கள். கிடைக்காவிட்டால் பரவாயில்லை. உங்கள் அறிவாற்றலுக்கும் அடுத்தவர்களை நீங்கள் மதிக்கும் பாங்கிற்காகவுமே உங்களை அனைவரும் நினைவில் வைத்திருப்பார்கள்.

* பணியிட விசுவாசம் இருக்கலாம், ஆனால் அடிமை வாழ்க்கை அவசியம் இல்லை. வாழ்க்கையில் செய்வதற்கு அதை விடவும் சிறந்த காரியங்கள் ஏராளம் உண்டு.

* நான் எனும் அகங்காரத்தை அறவே ஒழியுங்கள். ஈகோ வேண்டவே வேண்டாம். சம்பளத்திற்காக அல்ல மனசாட்சிக்கு பயந்து வேலை செய்யுங்கள். நம்முடைய நற்குணங்களே நம் சொத்துக்கள்.

* அடுத்தவர் உங்களை எப்படி நடத்தினாலும் பணிவோடு இருங்கள். எல்லோரையும் எப்போதும் திருப்திப்படுத்திவிட முடியாது.

* இறுதியில் நம் குடும்பம், நண்பர்கள், வீடு, ஆழ்மன அமைதியை விட எதுவும் பெரிதில்லை.

* அலுவலக கழிப்பிடங்கள், பார்கிங் ஏரியாக்களில் கிசுகிசுக்கள் பேசுவதைத் தவிர்க்கவும். பொதுவாகவே கிசு கிசு அவசியமில்லை. அதை தவிர்ப்பது நம் மனதிற்கு நல்லது. ஏனெனில் யார் எங்கே இருந்து நமக்கு எதிராக திரும்புவார்கள் என சொல்ல முடியாது.

* வேலை நேரம், குடும்ப நேரம் என சரியாகப் பிரித்து அதற்கேற்ப வேலை செய்யுங்கள்.

* வேலைகளைத் தள்ளிப் போடாதீர்கள். அல்லது சேர்த்து வைக்காதீர்கள். ஒருநாள் மொத்தமாக நம்மை பதம் பார்த்துவிடும்.

* ஆரோக்கியமான போட்டிகள் நல்லது, ஆனால் பொறாமை வேண்டாம். அது நம் நிம்மதியை கெடுத்துவிடும். ஒருவருக்கு அங்கீகாரம் கிடைக்கிறது எனில் ஏன் என அந்தத் திறனை வளர்த்துக்கொள்ள முயற்சியுங்கள்.

* புதியவர்களை கை கொடுத்துத் தூக்கி விடுங்கள். ஏனெனில் நாமும் ஒரு காலத்தில் புதியவராக இருந்தவர்கள்தான். ஒருவேளை புதிய நபர்களிடம் கற்றுக்கொள்ள நவீன விஷயங்கள் இருப்பின் கற்றுக்கொள்ள தயாராக இருங்கள்.

- கவிதா பாலாஜிகணேஷ்.