வங்கக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி 10 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு
சென்னை: தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக, தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளதாக சென்ைன வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில், தென்தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் நேற்று மழை பெய்துள்ளது. 26ம் தேதி வரையில் பலத்த, மிக பலத்த மழை திருவள்ளூர் மாவட்டம் தொடங்கி கன்னியாகுமரி வரை பெய்யும்.
டெல்டாவில் அதீத மழை பெய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், நவம்பர் இறுதியில் மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி டிசம்பர் 7ம் தேதி வரையில் தமிழகத்தில் பலத்த மழை பெய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை: தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளது.
அதன் காரணமாக ராமநாதபுரம், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நேற்று கனமழை பெய்தது. அதன் தொடர்ச்சியாக இன்று முதல் 15ம் தேதி வரையில் இதேநிலை நீடிக்கும். 17ம் தேதி தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது.
சென்னையில் இன்று பொதுவாக வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மேலும், தென் தமிழகக் கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக் கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 55 கிமீ வேகத்தில் இன்று வீசும் என்பதால் மீனவர்கள் அந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகின்றனர்.