Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பாரதிதாசன் பிறந்த நாளையொட்டி சிறந்த 5 தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளை நாட்டுடைமையாக்கி பரிசுத்தொகையை வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: பாரதிதாசனின் 135வது பிறந்தநாளை ஒட்டி நடந்த தமிழ் வாரவிழாவில் பங்கேற்று சிறந்த 5 தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாட்டுடைமையாக்கி பரிசுத்தொகையை வழங்கினார். “பாவேந்தர்” பாரதிதாசன் தமது இளம் வயதிலிருந்தே தமிழ்மொழி மீது தணியாத தாகமும் பற்றும் கொண்டிருந்தார். பாரதியார் புதுவையில் தங்கியிருந்தபோது, அவருடன் நெருங்கிய நட்பு கொண்டிருந்தார். பாரதியாரின் கவிதைகளில் மிகுந்த ஈடுபாடு கொண்டு அவர் போலவே இனிய கவிதைகளை எழுதினார். பாரதியார் அவர்களைத் தம் வழிகாட்டியாக ஏற்றுக்கொண்டு, பாரதிதாசன் எனத் தம் பெயரையே மாற்றிக் கொண்டார்.

பாரதிதாசன், தமிழாசிரியர், தமிழ்க் கவிஞர், திரைக்கதை ஆசிரியர், எழுத்தாளர் என்று பல்வேறு துறைகளில் தமிழ்மொழியின் இனிமையை மக்களிடம் எடுத்துச் சென்றவர். பாவேந்தர் பாரதிதாசன் 86-க்கும் மேற்பட்ட நூல்கள், கதைகள், கட்டுரைகளைப் படைத்துள்ளார். அவரது ‘பிசிராந்தையார்’ நாடகத்திற்காக 1970-ஆம் ஆண்டு ‘சாகித்திய அகாடமி விருது’, வழங்கப்பட்டது. ‘எங்கள் வாழ்வும் எங்கள் வளமும், மங்காத தமிழென்று சங்கே முழங்கு’, “தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்” போன்ற பல்வேறு காலத்தால் அழியாத பாடல்களை படைத்துள்ளார். தம் படைப்பாற்றல் மூலம் தமிழுக்குப் பல வழிகளில் தொண்டாற்றி, தமிழ் இனத்திற்கு எழுச்சியூட்டிய பாவேந்தர் பாரதிதாசன் 1964-ஆம் ஆண்டு இயற்கை எய்தினார்.

தமிழ் மொழியின், தமிழ் இனத்தின் சிறப்பை உலகிற்கு எடுத்துரைத்த பாரதிதாசனை சிறப்பிக்கும் வகையில், முதலமைச்சர் 22.4.2025 அன்று சட்டமன்ற பேரவையில், விதி எண்.110-ன் கீழ், ‘பாரதிதாசன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு ஏப்ரல் 29 முதல் மே 5 வரை தமிழ் வார விழா கொண்டாடப்படும்’ எனவும், இவ்விழாவில் கவியரங்கங்கள் மற்றும் இலக்கிய கருத்தரங்குகள், பாரதிதாசன் இளம் படைப்பாளர் விருது, தமிழ் இலக்கியம் போற்றுவோம், பள்ளிகளில் தமிழ் நிகழ்ச்சிகள், தமிழ் இசை மற்றும் கலை நிகழ்ச்சிகள் கொண்டாடப்படும் என்று அறிவித்தார். அதன்படி, இவ்விழாவினை சிறப்பாக நடத்திட தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறையால் 50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறையின் வழிகாட்டுதலின் அடிப்படையில், தமிழ் வளர்ச்சித்துறை, செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை, கலை பண்பாட்டுத்துறை என பல்வேறு அரசு துறைகள் இணைந்து இவ்விழாவினை 29.4.2025 முதல் 5.5.2025 வரை தமிழ்நாடு முழுவதும் நடத்திட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, கவியரங்கங்கள், இலக்கிய கருத்தரங்குகள், பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, கவிதைப் போட்டி, கலைப்போட்டிகள் சிறப்பாக நடத்தப்பட்டன. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசால் 4 ஆண்டுகளில், தமிழறிஞர்களின் படைப்புகள் உலக மக்கள் அனைவரிடமும் சென்று சேர வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு, கலைஞரின் அனைத்து நூல்களும் நூலுரிமைத் தொகை ஏதுமின்றி நாட்டுடைமையாக்கப்பட்டது.

மேலும், தமிழறிஞர்கள் நன்னன், சிலம்பொலி செல்லப்பன், விடுதலை ராஜேந்திரன், பேராசிரியர் இரா. குமரவேலன், மம்மது உள்ளிட்ட 32 அறிஞர்களின் 1,442 நூல்களை நாட்டுடைமையாக்கப்பட்டு, அதற்கான நூலுரிமைத் தொகையாக 3 கோடியே 79 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில், தமிழ் வார விழாவின் நிறைவு நாளான இன்று சென்னை, கலைவாணர் அரங்கத்தில் முதலமைச்சரின் தலைமையில் நடைபெற்ற நிறைவு விழாவில், தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் கவிக்கோ அப்துல் ரகுமான், எழுத்தாளர் மெர்வின், ஆ. பழநி ஆகியோர்களின் நூல்கள் நாட்டுடைமை செய்து அவர்களின் மரபுரிமையினருக்கும், கொ.மா. கோதண்டம் மற்றும் புலவர் இலமா தமிழ்நாவன் ஆகியோர்களின் நூல்கள் நாட்டுடைமை செய்து அவர்களுக்கும் நூலுரிமைத் தொகையாக தலா 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையினை வழங்கினார்.

மேலும், கலை பண்பாட்டுத் துறையின் இசைக் கல்லூரிகள் மற்றும் கவின்கலை கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களிடையே நடத்தப்பட்ட பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் பெருமையை போற்றும் இசை, நடனம் மற்றும் ஒவியப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு முதலமைச்சர் பரிசுகளை வழங்கி வாழ்த்தினார். இவ்விழாவில் பல்லவி இசைக்குழுவினரின் ‘பாவேந்தரின் எழுச்சி பாடல்களும்’, நரேந்திர குமார் நடன அமைப்பில் சென்னை தமிழ்நாடு அரசு இசைக்கல்லூரி மாணவியர்களின் தமிழ் அமுது-நாட்டிய நிகழ்ச்சியும், அனர்த்தனா குழுவினரின் ‘சங்கே முழங்கு’ மாபெரும் நடன நிகழ்ச்சியும், தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவர் திண்டுக்கல் ஐ. லியோனி அவர்களின் தலைமையில் ‘பாவேந்தர் பாரதிதாசன் பாடல்களில் விஞ்சி நிற்பது மொழி உணர்வா! சமூக உணர்வா! என்ற தலைப்பில் பட்டிமன்றமும் நடைபெற்றன.

முன்னதாக, முதலமைச்சர், தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரி மாணவ, மாணவியர்களின் “தமிழ் அமுது” நடன நிகழ்ச்சியையும், அனர்த்தனா குழுவினரின் ‘சங்கே முழங்கு’ மாபெரும் நடன நிகழ்ச்சியையும், தமிழ்மொழியின் சிறப்புகள் குறித்த குறும்படத்தையும் பார்வையிட்டார். இந்த விழாவில், அமைச்சர்கள் துரைமுருகன், மு.பெ. சாமிநாதன், ஆர்.எஸ். ராஜகண்ணப்பன், மா. சுப்பிரமணியன், சேகர் பாபு, சென்னை மாநகராட்சி மேயர் ஆர். பிரியா, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் எம். கே. மோகன், இ. பரந்தாமன், தாயகம் கவி, த. வேலு, ஜோசப் சாமுவேல், துணை மேயர் மு. மகேஷ்குமார், இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொஹிதீன்,

தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் க. மணிவாசன், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் ஆர். பாலகிருஷ்ணன், (ஓய்வு), தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் வே. ராஜாராமன், செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் மரு. இரா. வைத்திநாதன், கலை பண்பாட்டுத் துறை இயக்குநர் (முழு கூடுதல் பொறுப்பு) கவிதா ராமு, தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் ந. அருள், தமிழ்நாடு டாக்டர் ஜெ ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக்கழக துணை வேந்தர் சீ. சௌமியா மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.