Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

விருதுநகர் மாவட்டத்தில் மினி டைடல் பூங்கா அமைக்க டெண்டர் கோரியது தமிழ்நாடு அரசு..!!

சென்னை: பட்ஜெட் அறிவிப்பின்படி விருதுநகர் மாவட்டத்தில் மினி டைடல் பூங்கா அமைக்க தமிழ்நாடு அரசு டெண்டர் கோரியுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் டைடல் பார்க் அமைக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டு வருகிறது. இதன் மூலம், வேலைவாய்ப்புகள் அதிகரிக்கப்படும் மற்றும் ஐ.டி. நிறுவனங்கள் தொழில் தொடங்க ஊக்குவிக்கப்படும் வாய்ப்புள்ளது. சென்னை போன்ற பெருநகரங்களில் மட்டும் ஐ.டி. நிறுவனங்கள் குவிவதைத் தவிர்த்து, சிறிய நகரங்களிலும் தொழில் தொடங்க வாய்ப்புகளை ஏற்படுத்தி, வேலைவாய்ப்பை அதிகரிக்கும் வகையில், ஒவ்வொரு மாவட்டத்திலும் டைடல் பார்க் அல்லது மினி டைடல் பார்க் அமைப்பதன் மூலம், தமிழகத்தில் தகவல் தொழில்நுட்ப சூழல் அமைப்பினை மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தும் திட்டத்தை அரசின் நோக்கமாக கொண்டு செயலாற்றி வருகிறது.

இதைத்தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் மினி டைடல் பார்க் கட்டி திறக்கப்பட்டுள்ள நிலையில், விருதுநகர் மாவட்டத்தில் மினி டைடல் பூங்கா அமைப்பதற்கான கட்டுமான பணிகளை மேற்கொள்ள தமிழ்நாடு அரசு டெண்டர் கோரியுள்ளது. தரைத்தளம் மற்றும் மூன்று தளங்கள் கொண்டதாக இந்த மினி டைடல் பூங்கா அமைய உள்ளது. இந்த டைடல் பூங்கா மூலம் சுமார் 600 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். 12 மாதங்களில் இந்த கட்டுமான பணிகளை முடிக்க டைடல் பூங்கா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதற்கு வரைபடம், வடிவமைப்பு தயார் செய்வதற்கான திட்ட மேலாண்மை ஆலோசகர்களை தேர்வு செய்யவும் டெண்டர் கோரப்பட்டுள்ளது. ஐ.டி. சூழல் அமைப்பை விரிவுபடுத்தும் வகையில் 2,3ம் நிலை நகரங்களில் மினி டைடல் பூங்காக்கள் அமைக்கப்படுகின்றன.