Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சிறு குழந்தைக்கு தெரிந்த விஷயம் கூட வானதி சீனிவாசனுக்கு தெரியாமல் போனது எப்படி? கொளத்தூரில் அமைச்சர் எ.வ.வேலு பேட்டி

பெரம்பூர்: சிறுகுழந்தைக்கு தெரிந்த விஷயம்கூட வானதி சீனிவாசனுக்கு தெரியாமல் போனது எப்படி? என கொளத்தூரில் ஆய்வு செய்த அமைச்சர் எ.வ.வேலு கூறியுள்ளார். சென்னை கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பெரியார்நகரில் அரசு மருத்துவமனையில் கூடுதலாக புதிய கட்டிடம் கட்டும் பணி நடந்தது வருகிறது. இந்த பணியை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் இன்று காலை ஆய்வு செய்தனர். ஆய்வின்போது சென்னை மேயர் பிரியா மற்றும் அரசு உயரதிகாரிகள் பலர் உடனிருந்தனர். பின்னர், நிருபர்களிடம் அமைச்சர் எ.வ.வேலு கூறியதாவது: கொளத்தூர் தொகுதி பெரியார் நகரில் பழைய மருத்துவ மனை செயல்பட்டு வந்த நிலையில் புனரமைத்து புதுப்பிக்க முதலமைச்சர் நிதி ஒதுக்கினார். அதன்படி கூடுதலாக 300 படுக்கைகளுடன் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த திறப்பு விழாவில் அமைச்சர் சேகர்பாபு, கூடுதல் மருத்துவமனை கேட்டு பகுதி மக்கள் சார்பில் கோரிக்கை வைத்திருந்தார். அதன்படி முதல்கட்டமாக 55 கோடி ரூபாய் நிதியை முதலமைச்சர் ஒதுக்கினார். 2வது கட்டமாக 54.82 கோடி ரூபாய் ஒதுக்கி கட்டிட பணி நடைபெற்று வருகிறது. தற்போது 97% பணி நிறைவடைந்துள்ளது, அடுத்த வாரத்திற்குள் 100 சதவீத பணி முடிந்துவிடும். அடுத்த மாதம் 28ம்தேதி முதலமைச்சர் இந்த மருத்துவமனையை திறந்து வைக்க உள்ளார். இந்த மருத்துவனையில் 6 அறுவை சிகிச்சை மையம், மாற்றுத்திறனாளிகள் தனி சிகிச்சை பிரிவு, தீவிர சிகிச்சை பிரிவு, மகப்பேறு மருத்துவம், முழு உடல் பரிசோதனை, பணியாற்றும் மருத்துவர், செவிலியர் தங்க அறை என பல்வேறு வசதி செய்யப்பட்டுள்ளது. 102 மருத்துவர்கள், 234 செவிலியர்கள் தேவைப்படுகிறார்கள்.

இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத்துறையிடம் கேட்டுள்ளோம். தனியார் மருத்துவமனைக்கு இணையாக இந்த மருத்துவமனை கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியில் பொது மருத்துவமனை ராஜீவ்காந்தி பொதுமருத்துவமனை போல் உருவாகிவிட்டது. கொளத்தூர் தொகுதிக்கு முதலமைச்சர் சட்ட மன்ற உறுப்பினராக இருப்பதால் புண்ணியம் பெற்றுள்ளது. ஒருநாளைக்கு சராசரியாக 3 ஆயிரம் பேர் வரை சிகிச்சைக்கு வரலாம். ஏற்கனவே புதுப்பிக்கப்பட்ட மருத்துவமனையில் 2000 பேர் வரை சிகிச்சை பெற்று வருகிறார்கள். ஒட்டு மொத்தமாக 5000 பேர் மருத்துவமனைக்கு புறநோயாளியாக வருவார்கள். வள்ளுவர் கோட்டத்தை பொறுத்தவரை தை மாதம் திறக்க முயன்றோம். மழை உள்ளிட்ட இயற்கை பேரிடரால் கால தாமதம் ஏற்பட்டது. வள்ளுவர் கோட்டத்தை சுற்றி வெளி பூச்சு வேலை அதிகமாக உள்ளது.

உள்ளே வேலை குறைவு தான். இன்னும் அதிகபட்சம் 60 நாட்களில் வள்ளுவர் கோட்டம் பணி முடிவடையும். திருவான்மியூர் முதல் அக்கரை வரை 6 வழிச்சாலை அமைக்க நில எடுப்புக்கு 2009ம் ஆண்டு வெறும் 10 கோடி ரூபாய் இருந்த நிலையில் தொடர்ந்து தாமதமானதால் தற்போது நிலமெடுக்க ஆயிரம் கோடி ரூபாய் வரை வந்துவிட்டது. 98% வரை நில எடுப்பு பணிகள் முடிவடைந்துவிட்டது. ஒரு பகுதியில் விரிவாக்கப்பணி நடைபெற்று வருகிறது. விரைவாக அனைத்து பணிகளும் முடிவடைந்து விடும். வள்ளலாரையும், வள்ளுவரையும் நாங்கள் களவாடவில்லை, திமுகதான் களவாடுகிறது. முக்கடல் சங்கமிக்கும் கடலில் வள்ளுவருக்கு சிலை நிறுவ ஆரம்பித்தது ஆர்எஸ்எஸ்தான் என்று வானதி சீனிவாசன் கூறிய கருத்துக்கு, தமிழர்களுடைய ஐயன்தான் திருவள்ளுவர், மதத்திற்கு அப்பாற்பட்டவராகத்தான் திருவள்ளுவரின் குறள் உள்ளது, அனைத்து மதத்தினருக்கும் பொதுவானவர் திருவள்ளுவர், அதனால்தான் திருக்குறளை உலக பொதுமறை என சொல்கிறோம்.

வள்ளுவருக்கு சாயம்பூச நினைப்பவர்கள் வேறு என்ன சொல்வார்கள். கன்னியாகுமரியில் பொறிக்கப்பட்ட கற்கள் சான்றாக உள்ளது. கன்னியாகுமரியில் உள்ள சிறு குழந்தையிடம் கேட்டால் கூட தெரியும், ஐந்து முறை தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த கலைஞர்தான் திருவள்ளுவர் சிலையை கட்டினார், திறந்தார். இது எப்படி வானதி சீனிவாசனுக்கு தெரியாமல் போனது. சிறுகுழந்தைக்கு தெரிந்த விஷயம்கூட வானதி சீனிவாசனுக்கு தெரியாமல் போனது எப்படி? எனக்கு ஆச்சரியமாக உள்ளது. பெரியார் குறித்து சீமான் விமர்சனத்திற்கு நோ கமெண்ட்ஸ், நான் பெரியாரிஸ்ட், அதைப்பற்றி பேசினால் ரொம்ப கோபப்படுவேன். இவ்வாறு கூறியுள்ளார்.