சென்னை: மின்வெட்டை சரிசெய்ய தவெக அரசு ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எதையும் எடுக்கவில்லை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டி உள்ளார். இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், தவெக ஆட்சியில் பல்வேறு குளறுபடிகள் நடைபெறுகின்றன. தவெக ஆட்சியில் மின் கொள்முதலில் ஊழல் நடைபெற்றுள்ளது.
தமிழ்நாட்டில் தவெக அரசு செயற்கையாக மின் பற்றாக்குறையை உருவாக்குகிறது. செயற்கையாக மின்பற்றாக்குறையை உருவாக்கி, மின்சாரத்தை வெளிச்சந்தையில் இருந்து அதிக விலைக்கு வாங்குகின்றனர். இது ஊழல் இல்லையா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
பல கட்சித் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து ரூ.41.5-க்கு மின்கொள்முதல் செய்ய போடப்பட்ட ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ளது. திமுக ஆட்சியில் யூனிட் ரூ.20-க்கு வாங்கப்பட்ட மின்சாரம் தவெக ஆட்சியில் ரூ.30-க்கு வாங்கப்படுகிறது. கடந்த ஆட்சியில் ரூ.20-க்கு மின்கொள்முதல் செய்ததை தவெக ஊழல் என்றது. ஆனால் தற்போது இவர்கள் ஆட்சிக்கு வந்தவுடன் ரூ.41.50-க்கு ஒரு யூனிட் மின்சாரம் வாங்க முயற்சிக்கிறார்கள்; இது ஊழல் இல்லையா? எனவும் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
தவெக ஆட்சியில் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்கெட்டுவிட்டது. செஞ்சியில் மாயமான சிறுமியை இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. மாநிலத்தின் முதல்வர் போல செயல்படாமல். அரசு ஊழியரை போல மாலை 6 மணிக்கு வீட்டுக்கு சென்றால் மறுநாள் காலை 9 மணிக்குதான் விஜய் அதிகாரிகளை சந்திக்கிறார்.
மக்களுக்கு முதலமைச்சர் விஜய் விலைவாசி உயர்வை பரிசாக கொடுத்துள்ளார். தவெக ஆட்சி அமைந்த பிறகு அரிசி கிலோவுக்கு ரூ.20 உயர்ந்துள்ளது. முதல்வராக விஜய் பொறுப்பேற்ற பின் மளிகை பொருட்கள் விலை 40% உயர்ந்துள்ளது என எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார். சன்னரக அரிசி வாங்க எப்போது டெண்டர் விட்டீர்கள்? எங்கே கொள்முதல் செய்தீர்கள்? என தவெக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். தவெக அரசால் கைதுதான் செய்ய முடியும்; விலைவாசியை குறைக்க முடியாது என்றார்.


