Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

மும்மொழிக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒன்றிய அரசை கண்டித்து நாளை அனைத்துக்கட்சிகள் ஆர்ப்பாட்டம்

சென்னை: மும்மொழிக் கொள்கைக்கு எதிராக ஒன்றிய அரசை கண்டித்து நாளை அனைத்துக்கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர். இது தொடர்பாக திமுக, காங்கிரஸ், தி.க., விசிக, மதிமுக, கம்யூனிஸ்ட், முஸ்லிம் லீக், மநீம, மமக, கொமதேக, தவாக உள்ளிட்ட கட்சிகள் இணைந்து கூட்டறிக்கை வெளியிட்டுள்ளன. அதில்; தமிழ்நாட்டின் உரிமைகளைச் சிதைப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் ஒன்றிய மோடி அரசு எடுத்து வருகிறது. புதிய கல்விக் கொள்கையை ஏற்கும் வரை தமிழ்நாடு கல்வித்துறைக்கு நிதி தர இயலாது என ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் மிரட்டுகிறார்.

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழ்நாட்டிற்கான நிதியைத் தருவதில் பாரபட்சம் காட்டி, பட்ஜெட்டில் தொடர்ந்து தமிழ்நாட்டுக்கான திட்டங்களைப் புறக்கணிக்கிறார்; பதவிக்காலம் முடிந்து போன ஆளுநரை வைத்துக் கொண்டு அத்துமீறல்கள்; யுஜிசி மூலம் மாநிலத்தின் கல்விக் கட்டமைப்பைச் சிதைப்பதற்கான நடவடிக்கைகள்; தொடர்ச்சியான திராவிட - தமிழ் வெறுப்பு நடவடிக்கைகள்; மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் இந்தித் திணிப்புக்கான முன்னெடுப்புகள் எனத் தமிழ்நாட்டை வஞ்சித்துக் கொண்டிருக்கும் மோடி அரசை வீறுகொண்டு எதிர்க்க வேண்டிய சூழலை உருவாக்கி வருகிறார்கள்.

தமிழர்கள் தனித்துவமானவர்களாக இருப்பதும், கல்வி - வேலைவாய்ப்பு - சமூகநீதி - வாழ்க்கைத்தரம் என அனைத்து வகையிலும் உயர்ந்திருப்பதும் மோடி அரசின் கண்களை உறுத்துகிறது. அது, அரசியல்ரீதியாகப் பா.ஜ.க.,வை அண்டவிடாத தமிழ்நாட்டு மக்களின் மீது வெறுப்பை உமிழ்கிறது. பிளவுவாத சக்திகளுக்கு எதிராக ஓரணியில் நிற்கும் தமிழ்நாட்டை வீழ்த்திவிட முயற்சிக்கிறது. வீழ்த்த முயற்சிக்கும் போதெல்லாம் தமிழ்நாடு ஒன்றிணையும்! எதிரி எந்த வடிவில் வந்தாலும் துணிந்து நிற்கும்.

அப்படியான ஒரு சூழலை வலிந்து உருவாக்கி வரும் மோடி அரசைக் கண்டித்து முதற்கட்டமாக அனைத்துக் கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொள்ளும் “மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்” பிப்ரவரி 18 (செவ்வாய்க்கிழமை) மாலை 4 மணியளவில் சென்னை ஆட்சியர் அலுவலகம் முன்பாக நடைபெறுகிறது.தமிழ்நாட்டிடமிருந்து நிதியைப் பெற்றுக் கொள்ளும் ஒன்றிய அரசு தமிழ்நாட்டை வஞ்சிப்பது ஏன் என உரக்கக் குரல் எழுப்புவோம்! தமிழ்நாட்டின் உரிமைகள் மீது கை வைத்தால் சிலிர்த்து எழுவோம் என்பதை உணர்த்துவோம். ஒன்றிணைவோம்! உரக்கக் குரல் எழுப்புவோம். உரிமைகளை மீட்போம் என்று குறிப்பிட்டுள்ளனர்.