Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நோய் வாய்ப்பட்டு சிரமப்படும் தெரு நாய்களை கருணைக் கொலை செய்ய தமிழ்நாடு அரசு அனுமதி!

மோசமாக காயமடைந்து நோய்வாய்ப்பட்ட தெருநாய்களை கருணை கொலை செய்ய தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது. தமிழ்நாடு மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் நாய்க்கடி தொல்லை அதிகரித்து வருகிறது. சாலைகளில் நடந்து செல்லும் குழந்தைகள் உள்பட பெரியவர்கள் வரை பலரையும் தெருநாய்கள் துரத்தி துரத்திக் கடிப்பது, இதனால் குழந்தைகள் உயிரிழப்பது போன்ற சம்பவங்கள் நிறைய நடக்கின்றன. இந்த நாய்க்கடியால் ரேபிஸ் நோய் பாதிப்பு இந்தியாவில் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்துகிறது. இதுதொடர்பாக நாடாளுமன்றங்களிலும் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த உறுப்பினர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அதிகரித்து வரும் ரேபிஸ் நோயால், ஏற்கனவே கேரளாவில் தெருநாய்களை கருணைக்கொலை செய்ய அம்மாநில அரசு அனுமதி அளித்துள்ளது. .இந்நிலையில், மோசமாக காயமடைந்து நோய்வாய்ப்பட்ட தெருநாய்களை கருணை கொலை செய்ய தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது. தெருநாய்களால் ரேபிஸ் உள்ளிட்ட நோய் பாதிப்புகள் ஏற்படும் நிலையில் கால்நடைத்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. பதிவுசெய்யப்பட்ட கால்நடை மருத்துவர்கள் மூலம் கருணை கொலை செய்யப்பட வேண்டும். கருணை கொலை செய்யப்படும் தெருநாய்களை முறையாக அடக்கம் செய்ய வேண்டும்.

கருணை கொலை செய்யப்படும் நாய்கள் குறித்து ஆவணங்கள் பாராமரிக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விரிவான வழிகாட்டு நடைமுறைகள் விரைவில் வெளியிடப்படும் என்றும், சாலைகளில் சுற்றித் திரியும் விலங்குகளை கட்டுப்படுத்துவது தொடர்பான கொள்கையும் தமிழ்நாடு அரசு சார்பில் விரைவில் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சாலைகளில் சுற்றித்திரியும் விலங்குகளை கட்டுப்படுத்தும் விதமாகவும், ரேபிஸ் உள்ளிட்ட நோய் பாதிப்புகள் குறையும் என்பதாலும் கால்நடை துறையின் இந்த அரசாணை முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.