சென்னை: தளவாய் சுந்தரத்துக்கு எடப்பாடி பழனிசாமி அதிமுகவில் மீண்டும் பதவி வழங்கினார். ஆர்.எஸ்.எஸ். பேரணியை தொடங்கி வைத்ததால் கட்சியில் பதவி பறிக்கப்பட்ட தளவாய் சுந்தரத்துக்கு மீண்டும் பொறுப்பு வழங்கப்பட்டது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால், டெல்லியின் தமிழக பிரதிநிதியாக பொறுப்பு வகித்தவர் தளவாய் சுந்தரம். தொடர்ந்து 20 ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு வருகிறார். ஆர்.எஸ்.எஸ். பேரணியை தொடங்கி வைத்த விவகாரத்தில் கட்சி பொறுப்பில் இருந்து கடந்த அக்.8-ல் தளவாய் சுந்தரம் நீக்கப்பட்டார்.
ஆர்எஸ்எஸ் பேரணியில் கலந்துகொண்டதால் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், அதற்கு வருத்தம் தெரிவித்து தலைமைக்கு தளவாய் சுந்தரம் விளக்கம் அளித்திருந்தார். இந்நிலையில் தளவாய் சுந்தரத்துக்கு எடப்பாடி பழனிசாமி அதிமுகவில் மீண்டும் பதவி வழங்கினார். அதிமுக அமைப்புச் செயலாளராகவும் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளராகவும் தளவாய் சுந்தரம் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 40 நாட்களில் மீண்டும் தளவாய் சுந்தரத்துக்கு அதிமுகவில் பதவி வழங்கப்பட்டுள்ளது.
வரும் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு யாரையும் இழப்பதற்கு எடப்பாடி விரும்பவில்லை என்பதால்தான் தளவாய் சுந்தரத்திற்கு இந்த பொறுப்பு மீண்டும் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.


