Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

18 வயதில் பட்டம் வென்று வரலாற்று சாதனை தமிழக வீரர் குகேஷ் உலக செஸ் சாம்பியன்: சீன வீரர் டிங் லிரெனை வீழ்த்தினார்; பிரதமர் மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின், ராகுல் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து

சிங்கப்பூர்: நடப்பு உலக செஸ் சாம்பியனும், சீன கிராண்ட் மாஸ்டருமான டிங் லிரெனை, சிங்கப்பூரில் நேற்று நடந்த 14வது சுற்றில் வீழ்த்தி, இந்திய கிராண்ட் மாஸ்டர் குகேஷ் புதிய உலக சாம்பியனாக உருவெடுத்துள்ளார். இந்த பட்டத்தை பெறும் உலகின் மிக இளவயது வீரர் குகேஷ். நடப்பு உலக செஸ் சாம்பியனும், சீனா கிராண்ட் மாஸ்டருமான டிங் லிரென் இந்திய கிராண்ட் மாஸ்டர் குகேஷ் இடையே உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டிகள் சிங்கப்பூரில் 14 சுற்றுகளாக நடந்து வந்தன. ஏற்கனவே முடிந்த 13 சுற்றுகளில் இருவரும் தலா 2 வெற்றிகள் 9 டிராக்கள் பெற்றதால், தலா 6.5 புள்ளியுடன் சம நிலையில் இருந்தனர்.

இந்நிலையில் 14வது மற்றும் இறுதிச் சுற்றுப் போட்டி, சிங்கப்பூரில் நேற்று நடந்தது. சமீபத்தில் முடிந்த சுற்றுக்களை போல் இந்த சுற்றும் டிராவை நோக்கியே சென்று கொண்டிருந்தது. எந்த நேரமும் டிரா செய்யப்படலாம் என்ற சூழல் காணப்பட்டது. ஆனால், ஆட்டத்தின் 55வது நகர்த்தலில் யானையை தவறுதலாக வெட்டு தந்தார் லிரென். அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி அடுத்த காய்களை நகர்த்தி வலுவான நெருக்கடி தந்தார் குகேஷ். அதனால் வேறு வழியின்றி 58வது நகர்த்தல் முடிவில் தோல்வியை தழுவினார் லிரென். இதனால் குகேஷ் 7.5-6.5 என்ற புள்ளிக் கணக்கில் அபாரமாக வெற்றி வாகை சூடியுள்ளார்.

இந்த வெற்றி மூலம், 18வது உலக செஸ் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார் குகேஷ். இந்த பட்டத்தை 18 வயதில் வென்றுள்ள அவர், உலகளவில் குறைந்த வயதில் செஸ் சாம்பியன் ஆன பெருமையை பெற்றுள்ளார். இதற்கு முன் கடைசியாக இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த், 2012ல் உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்றார். அதற்கு பின் செஸ் உலக சாம்பியன் பட்டம் பெறும் முதல் இந்தியர் என்ற சாதனையையும் குகேஷ் படைத்துள்ளார். குகேஷ், சென்னை அயனம்பாக்கம் வேலம்மாள் பள்ளியில் 12ம் வகுப்பு படிக்கிறார்.

லிரெனை வென்று புதிய உலக சாம்பியனாகி உள்ள குகேசுக்கு 21 கோடி ரூபாய் பரிசுத் தொகை கிடைக்கும். நடப்பாண்டில், 2024 கேண்டிடேட்ஸ் டோர்னமென்டில் வெற்றி வாகை சூடிய குகேஷ், செஸ் ஒலிம்பியாட்டிலும் தங்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்கு பிரதமர் மோடி, தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், பாமக தலைவர் அன்புமணி, ஜி.கே.வாசன், டிடிவி தினகரன் உள்ளிட்ட பல்வேறு தமிழக கட்சி தலைவர்களும், பிரபலங்களும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

* நனவாகிய கனவு

வெற்றி பெற்ற தமிழ்நாட்டை சேர்ந்த குகேஷ் மகிழ்ச்சி பொங்க, நெகிழ்ச்சியுடன் கூறுகையில், ‘இந்த போட்டி டிராவில் முடியும் என்று நினைத்தேன். ஆனால், இளம் வயதில் உலக சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைக்க வேண்டும் என்று, 11 வயதில் நான் கண்ட கனவை நிறைவேற்றும் வகையில் தற்போது வெற்றி பெற்றுள்ளேன்’ என்றார்.

* 2 ஆண்டு பயிற்சியால் கிடைத்த பலன்

குகேஷ் நிருபர்களிடம் கூறியதாவது: சீன வீரர் டிங் லிரெனுடனான உலக சாம்பியன் போட்டிக்கு உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் நீண்ட நாட்களாக தயாராகி வந்தேன். இரண்டு ஆண்டுகளாக நான் மேற்கொண்ட தீவிர பயிற்சிகளுக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. சிறந்த பயிற்சிகளால் இந்த வெற்றி எனக்கு கிடைத்துள்ளது. எல்லா இளம் செஸ் வீரர்ளை போன்றே, செஸ் உலகில் சாதனை படைக்க வேண்டும் என நானும் விரும்பினேன். குறிப்பாக செஸ் சாம்பியன் ஆக வேண்டும் என்பது, 11 வயதாக இருக்கும்போதே நான் கண்ட கனவு. அது, தற்போது நிறைவேறி உள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

* ஆனந்த் பாராட்டு

செஸ் ஜாம்பவான் விஸ்வநாதன் ஆனந்த் கூறியதாவது: உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் குகேஷின் ஆட்டம் அற்புதமாக இருந்தது. அனுபவமிக்க வீரரான டிங் லிரெனை சாமர்த்தியமாகவும், போராட்ட குணத்துடன் குகேஷ் எதிர்கொண்டார். சில தவறுகள் செய்தாலும் நிதானமாக அதை சரி செய்து வெற்றி பெற்றுள்ள குகேசுக்கு பாராட்டுகள். அவரது கடின உழைப்புக்கு சிறந்த பரிசாக உலக செஸ் சாம்பியன் பட்டம் கிடைத்துள்ளது. இவ்வாறு ஆனந்த் கூறியுள்ளார்.