Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஆட்சேபனையற்ற இடங்களில் குடியிருக்கும் 86,000 பேருக்கு பட்டா வழங்கப்படும்: தமிழக அரசு அரசாணை வெளியீடு

சென்னை: தமிழ்நாடு முழுவதும் ஆட்சேபனையற்ற இடங்களில் குடியிருக்கும் மக்களுக்கு பட்டா வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 17ம் தேதி நடைபெற்ற மாநில அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் படி 86,000 பேருக்கு பட்டா வழங்கப்பட உள்ளது. சென்னையைச் சுற்றியுள்ள 4 மாவட்டங்களில் ‘பெல்ட் ஏரியா’ எனப்படும் 32 கி.மீ பகுதிகளில் ஆக்கிரமிப்பு செய்து நீண்ட காலமாக குடியிருப்பவர்கள் மற்றும் இதர மாவட்டங்களில் ஆட்சேபகரமற்ற பகுதிகளில் ஆக்கிரமிப்பு செய்து குடியிருப்பவர்களுக்கு பட்டா வழங்குவதற்கான தடையை நீக்குவது தொடர்பாக, கடந்த பிப்.10ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது. அதன்படி, சென்னையில் மட்டும் ஆட்சேபமற்ற புறம்போக்கு பகுதிகளில் 29,187 பேரும், இதர மாவட்டங்களில் 57,084 பேர் என, 86 ஆயிரம் பேருக்கு 6 மாதங்களில் பட்டா வழங்க வருவாய்த் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கான வழிகாட்டி விதிமுறைகள் கடந்த மாதம் வெளியிடப்பட்டன. அதில், குறிப்பிடப்பட்ட ஆண்டு வருமான வரம்பு உள்ளிட்ட சில விதிகள் தொடர்பாக, பல்வேறு கோரிக்கைகள் வந்ததால், திருத்தம் செய்யப்படும் என்று கூறப்பட்டது.

இதுதொடர்பாக, கடந்த ஏப்ரல் 17ம் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு அடிப்படையில் வழிமுறைகளில் திருத்தம் வருவாய் துறை அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி, குறிப்பிட்ட சில வகை புறம்போக்கு நிலங்களில், 10 ஆண்டுகளுக்கு மேலாக வசிப்போருக்கு பட்டா வழங்க, ஆண்டு வருமானம், ரூ.3 லட்சமாக இருந்தது. இந்த வரம்பு தற்போது, ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், நில ஒதுக்கீட்டு வரம்புகளும் திருத்தப்பட்டுள்ளன. அதன்படி, ஆண்டு வருமானம், ரூ.5 லட்சமாக உள்ள குடும்பங்களுக்கு, 3 சென்ட் நிலத்துக்கு பட்டா வழங்கப்படும்.

அதில், 2 சென்ட் நிலத்திற்கு கட்டணம் எதுவும் இருக்காது. மீதமுள்ள ஒரு சென்ட்டுக்கு நில மதிப்பில், 25 சதவீத தொகையை செலுத்த வேண்டும். ஆண்டு வருமானம், ரூ.5 லட்சத்திற்கு மேல், ரூ.12 லட்சத்திற்குள்ள இருக்கும் குடும்பங்கள், 2 சென்ட்டுக்கு நில மதிப்பில், 50 சதவீத தொகையும், ஒரு சென்ட்டுக்கு நில மதிப்பில், 100 சதவீத தொகையையும் செலுத்த வேண்டும். ஆண்டு வருமானம், ரூ.12 லட்சத்திற்கு மேல் உள்ள குடும்பங்கள், 3 சென்ட்டுக்கும் நில மதிப்பில், 100 சதவீத தொகையை செலுத்த வேண்டும். நகர்ப்புறம், ஊரகம் இரண்டுக்கும் இந்த விதிமுறை பொருந்தும். என தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டுள்ளது.