Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
Chettinad Cements
search-icon-img
Advertisement

தமிழகத்தில் டாக்டர்கள், நர்சுகள் உள்ளிட்ட பணியிடங்களுக்கு வரும் 24ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்: பொது சுகாதாரத்துறை அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் டாக்டர்கள், நர்சுகள் உள்ளிட்ட பணியிடங்களுக்கு வரும் 24-ந்தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என பொது சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. சென்னை மாநகராட்சியிலும், பிற இடங்களிலும் மொத்தம் 708 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் அமைக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்தார். அதன்படி, முதல்கட்டமாக சென்னை மாநகராட்சியில் 140 மையங்கள் உள்பட 500 நகர்ப்புற நலவாழ்வு மையங்களை பொதுமக்களின் பயன்பாட்டுக்காக கடந்த ஆண்டு ஜூன் 6-ந்தேதி முதல்-அமைச்சர் திறந்துவைத்தார்.

ஒவ்வொரு நகர்ப்புற நலவாழ்வு மையத்திலும் ஒரு டாக்டர், ஒரு நர்சு, ஒரு சுகாதார ஆய்வாளர் மற்றும் ஒரு துணை பணியாளர் மாவட்ட சுகாதார சங்கங்களின் மூலம் பணியமர்த்தப்பட்டனர். காலை 8 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் செயல்படும் இந்த மையங்களில் அத்தியாவசிய மருத்துவ சேவைகள், பரிசோதனைகள் அளிக்கப்படுகின்றன. நோயாளிகள் டாக்டர்களை காணொலி மூலமாக தொடர்பு கொண்டும் சிகிச்சை பெற முடியும். இந்த நிலையில், எஞ்சிய 208 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் தொடங்கப்பட உள்ளது.

அங்கு பணிபுரிய டாக்டர்கள், நர்சுகள் நியமனத்துக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மாவட்ட சுகாதார சங்கம் சார்பில் 208 டாக்டர்கள் மற்றும் நர்சுகள், 832 மருத்துவ பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் அங்கு நியமனம் செய்யப்பட உள்ளனர். இதில், டாக்டர்களுக்கு மாதம், ரூ.60 ஆயிரம், நர்சுகளுக்கு ரூ.18 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும் என பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் செல்வவிநாயகம் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு வரும் 24-ந்தேதிக்குள் அந்தந்த மாவட்டங்களில் விண்ணப்பிக்கலாம். நேர்முகத்தேர்வு ஏப்ரல் 1-ந்தேதி நடத்தப்பட்டு, 2-ந்தேதி அதற்கான முடிவுகள் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.