Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தமிழகத்தில் சோதனை அடிப்படையில் இயற்கை எரிவாயு மூலம் 20 அரசு பஸ்கள் இயக்கம்: 2 கி.மீ. கூடுதல் மைலேஜ் கிடைக்கிறது

சேலம்: தமிழகத்தில் சோதனை அடிப்படையில் இயற்கை எரிவாயு மூலம் 20 அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. டீசல் பயன்பாட்டை விட 2 கிலோ மீட்டர் கூடுதல் மைலேஜ் கிடைப்பதால் போக்குவரத்து கழகத்திற்கு லாபம் கிடைக்கிறது. காற்றில் கலக்கும் கார்பன் மாசுவை கட்டுப்படுத்த இயற்கை எரிவாயு பயன்பாட்டை அதிகரிக்கும் பணியில் அரசு ஈடுபட்டுள்ளது. இதற்காக முக்கிய நகரங்களில் இயற்கை எரிவாயு பயன்பாட்டை கொண்டு வர நகர இயற்கை எரிவாயு விநியோக திட்டத்தை ஒன்றிய அரசு செயல்படுத்துகிறது.

தமிழ்நாட்டில் சென்னை, காஞ்சிபுரம், சேலம், ஈரோடு, கோவை, மதுரை, தூத்துக்குடி உள்ளிட்ட நகரங்களில் இயற்கை எரிவாயு விநியோக திட்டம் செயல்பாட்டில் இருக்கிறது. பெட்ரோல், டீசல், எல்பிஜி காஸ் சிலிண்டருக்கு மாற்றாக இயற்கை எரிவாயுவை பயன்படுத்துகின்றனர். இதில், வாகன இயக்கத்திற்கும் சிஎன்ஜி என்னும் இயற்கை எரிவாயுவை பயன்படுத்துகிறார்கள். சுருக்கப்பட்ட இயற்கை எரிவாயு (சிஎன்ஜி) என்பது பாதுகாப்பான, சிக்கனமான மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த எரிபொருள்.

இது உயர் அழுத்தத்தில் சேமிக்கப்படும் மீத்தேன் வாயுவை கொண்டது. கார்கள், பேருந்துகள், லாரிகள், ஆட்டோக்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான வாகனங்களில் சிஎன்ஜி காஸ் பயன்படுத்தப்படுகிறது. தமிழகம் முழுவதும் தற்போது 1.03 லட்சம் பஸ், லாரி, கார், ஆட்டோக்கள் சிஎன்ஜி என்னும் இயற்கை எரிவாயு மூலம் இயங்குகிறது. இதில், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகமும் சோதனை அடிப்படையில் சிஎன்ஜி காஸ் பஸ்களை இயக்கி பார்த்து வருகிறது. சென்னை, விழுப்புரம், சேலம், கும்பகோணம், கோவை, மதுரை, திருநெல்வேலி ஆகிய போக்குவரத்து மண்டலங்களில் 2 அல்லது 3 பஸ்களை சிஎன்ஜி காஸ் மூலம் இயக்குகின்றனர். ஒட்டுமொத்தமாக 20 பஸ்கள் இயற்கை எரிவாயுவை கொண்டு இயங்குகிறது.

இந்த பஸ்களின் மைலேஜ், டீசல் மூலம் கிடைப்பதை விட 30 சதவீதம் அதிகம் கிடைக்கிறது. ஒரு லிட்டர் டீசலுக்கு 5 முதல் 6 கிலோ மீட்டருக்கு பஸ் இயக்கப்படுகிறது. அதுவே ஒரு கிலோ சிஎன்ஜி காஸ் மூலம் 6.5 முதல் 7.5 கிலோ மீட்டருக்கு பஸ் இயங்குகிறது. டீசலின் விலை லிட்டர் ₹93 என இருக்கிறது. ஆனால், சிஎன்ஜி காஸ் ஒரு கிலோ ₹79.50 என உள்ளது. சிஎன்ஜி காஸ் மூலம் பஸ்களை இயக்குவதால் அதிக மைலேஜ் கிடைப்பதோடு, எரிபொருள் செலவும் குறைவாக இருக்கிறது. இதனால், அரசு போக்குவரத்து கழகங்கள் சிஎன்ஜி காஸ் பஸ்களின் மூலம் லாபத்தை பார்த்து வருகிறது. சோதனை அடிப்படையில் 20 பஸ்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில், அதன் எண்ணிக்கையை அதிகரிக்கவும் போக்குவரத்து கழக அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.