Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

சிரியாவிலிருந்து 75 இந்தியர்கள் பத்திரமாக மீட்பு: லெபனான் வழியாக தாயகம் அழைத்துவர நடவடிக்கை

டமாஸ்கஸ்: சிரியவில் நிலவிவரும் பதற்றமான சூழலில் முதல்கட்டமாக 75 இந்தியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். நேற்று (10.12.2024) மாலை அவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். சிரிய தலைநகர் டமஸ்கஸ் மற்றும் லெபனான் தலைநகர் பெய்ரூட் நகரங்களில் இயங்கிவரும் இந்திய துணை தூதரகத்தின் முயற்சியின் மூலம் 75 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர். இவர்களில் 44 பேர் ஜம்மு காஷ்மீரை சேர்ந்தவர்களாவர். மீட்கப்பட்ட இந்தியர்கள் பத்திரமாக லெபனான் அழைத்துவரப்பட்டனர். அவர்கள் அங்கிருந்து விமானங்கள் மூலம் இந்தியா அழைத்துவரப்படுவார்கள் என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சிரியாவில் 2011-ம் ஆண்டு முதல் உள்நாட்டுப்போர் நடைபெற்று வருகிறது. அதிபர் பஷார் அல்-ஆசாத் தலைமையிலான அரசுப் படைகளுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையிலான சண்டையில், சில முக்கிய நகரங்கள் கிளர்ச்சியாளர்கள் வசம் சென்றன. கடந்த சில ஆண்டுகளாக பெரிய அளவில் மோதல் ஏற்படாத நிலையில், கடந்த வாரம் மீண்டும் கிளர்ச்சி வெடித்தது. அலெப்போ மற்றும் ஹமா பகுதிகளை கைப்பற்றிய கிளர்ச்சியாளர்கள் தொடர்ந்து முன்னேறி தலைநகர் டமாஸ்கசையும் கைப்பற்றினர்.இதையடுத்து 50 ஆண்டு கால ஆசாத் குடும்பத்தின் ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது.

இந்த நிலையில் நேற்று 75 இந்தியர்கள் முதற்கட்டமாக மீட்கப்பட்டுள்ளனர். மேலும், சிரியாவில் உள்ள இந்தியர்கள் பத்திரமாக இருக்கும்படியும், டமஸ்கஸில் உள்ள இந்திய துணைத் தூதரகத்துடன் தொடர்பில் இருக்கும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அவசரமான சூழலில் இந்தியர்கள் +963 993385973 என்ற எண்ணில் தொடர்புகொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். hoc.damascus@mea.gov.in என்ற இமெயில் முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.