Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

கர்னல் சோஃபியா குறித்து சர்ச்சை கருத்து.. ம.பி. பாஜக அமைச்சர் விஜய்ஷாவின் மன்னிப்பை ஏற்க முடியாது : உச்சநீதிமன்றம் திட்டவட்டம்

டெல்லி : ம.பி. பாஜக அமைச்சர் விஜய்ஷாவின் மன்னிப்பை ஏற்க முடியாது என உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. பாகிஸ்தானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகள் குறித்த விவரங்களை கர்னல் சோஃபியா குரேஷி உள்ளிட்ட அதிகாரிகள் வெளியிட்டு வந்தனர். ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை நாட்டுக்கு விளக்கிய ராணுவ கர்னல் சோஃபியா குரேஷியை ‘பயங்கரவாதிகளின் சகோதரி’ என மத்திய பிரதேச மாநில பாஜக அமைச்சர் விஜய் ஷா தெரிவித்த கருத்து சர்ச்சையானது. இவ்விவகாரத்தை தாமாக முன் வந்து விசாரணைக்கு ஏற்றது மத்திய பிரதேச உயர் நீதிமன்றம்.

அமைச்சர் விஜய் ஷா மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை உச்சநீதிமன்றமும் இதனை உறுதி செய்தது. இந்த நிலையில், வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, இவ்விவகாரத்தில் அமைச்சர் விஜய் ஷா மன்னிப்பு கோருவதாக அவரது வழக்கறிஞர் மனு ஒன்றிய தாக்கல் செய்தார். இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த உச்சநீதிமன்றம், "நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட பிறகு அமைச்சர் மன்னிப்பு கேட்டதை ஏற்க முடியாது. அவதூறாக பேசிவிட்டு சில நேரங்களில் முதலை கண்ணீர் வடிப்பதை ஏற்கமுடியாது. மிக மிக தரம் தாழ்ந்த வார்த்தைகளை அமைச்சர் பயன்படுத்தி உள்ளார். ராணுவம் தொடர்புடையது குறித்து பேசும்போது மிகவும் பொறுப்புடன் பேச வேண்டும். தனது பேச்சு மனதை புண்படுத்திவிட்டது என்பதைக்கூட அமைச்சர் ஏற்க தயாராக இல்லை.

மிக மோசமான கருத்துகளை பேசிவிட்டு, “என்னுடைய பேச்சு மனதை புண்படுத்தி இருந்தால்.." எனக் கூறி மன்னிப்பு வீடியோ வெளியிட்டுள்ளார். மன்னிப்பில் கூட உண்மைத்தன்மை இல்லை. வழக்கில் இருந்து தப்பிக்க வீடியோ வெளியிட்டுள்ளார். ம.பி. பாஜக அமைச்சரின் மன்னிப்பை முழுமையாக நிராகரிக்கிறோம். பா.ஜ.க. அமைச்சர் விஜய் ஷா பேச்சால் ஒட்டுமொத்த நாட்டுக்கும் வெட்கக்கேடு. ம.பி.யைச் சேராத ஐபிஎஸ் அதிகாரி தலைமையில் எஸ்ஐடி குழு விசாரணை நடைபெற வேண்டும்.அமைச்சர் விஜய் ஷா மீதான வழக்கை விசாரிக்க சிறப்பு குழுவை நாளை காலை 10 மணிக்குள் அமைக்க ம.பி.அரசுக்கு உத்தரவிடுகிறோம். வெளிமாநிலத்தைச் சேர்ந்த ஐஜி அல்லது ஏடிஜிபி அந்தஸ்தில் உள்ள அதிகாரி தலைமையில் இந்த விசாரணைக்குழு இருக்க வேண்டும்.விசாரணை அறிக்கையை மே 28ம் தேதி தாக்கல் செய்ய வேண்டும்", இவ்வாறு உத்தரவிட்டனர்.