நம் வாழ்வின் ஒரு பகுதியே தவிர, மனித வாழ்வே திரைப்படம் அல்ல! இதுதான் நீங்கள் சொன்ன மாற்றமா? சீமான் கடும் கண்டனம்
சென்னை: புதிய திரைப்படங்கள் வெளியாகும்போது அதிகாலை 6 மணி முதல் நாளொன்றுக்கு ஆறு காட்சிகள் வரை திரையிட அனுமதி அளித்துள்ள தவெக அரசின் அறிவிப்பு அதிர்ச்சியளிப்பதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறியிருப்பதாவது;
"ஒரு நாட்டின் மக்களை அறிவிலும், ஆற்றலிலும் சிறந்தவர்களாக உருவாக்க வேண்டிய அரசு, அதிகாலையிலேயே அவர்களை திரையரங்குகளுக்கு அழைப்பதை முதன்மை சாதனையாக கருதுவது வெட்கக்கேடானது. போதைக்கும், பொழுதுபோக்குக்கும் முன்னுரிமை கொடுத்து எந்தச் சமூகம் வாழ்ந்து, வளர்ந்திருக்கிறது? இதுதான் தமிழகத்துக்கு நீங்கள் கொண்டுவருவதாகச் சொன்ன மாற்றமா முதலமைச்சர் அவர்களே? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
திரைப்படம் என்பது அறிவியலின் அழகான குழந்தை; ஆகச்சிறந்த கலை வடிவம்; அது மக்களுக்கு நல்ல கருத்துகளைச் சொல்லக்கூடிய ஆற்றல்மிக்க ஊடகம் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை. திரைப்படக் கலைஞர்களின் உழைப்பையும், திரைத்தொழிலை நம்பி வாழும் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க வேண்டிய கடமை அரசுக்கு இருக்கிறது. அதேநேரத்தில், திரைப்படம் என்பது மனித வாழ்வின் ஒரு பகுதிதானே தவிர, மனித வாழ்வே திரைப்படம் அல்ல!
பொழுதுபோக்கு என்பது மனிதனுக்குத் தேவையான ஓய்வுதானே தவிர, அதுவே மனிதனின் ஒட்டுமொத்த வாழ்க்கையாகிவிடக் கூடாது. ஒரு சமூகத்தின் வரலாறு, இலக்கியம், பண்பாடு, அறிவியல், அரசியல், பொருளாதாரம் என அனைத்தையும் திரையுலகத்தைச் சுற்றியே கட்டமைக்க நினைப்பது எத்தகைய ஆபத்தான போக்கு? திரைப்படத்தையே வரலாறாகவும், திரைக்கதையையே வாழ்க்கையாகவும், திரைநாயகர்களையே தலைவர்களாகவும் கருதும் மனநிலையிலிருந்து இளைய தலைமுறையை மீட்டெடுக்க வேண்டிய அரசே திரைமோகத்தில் மேன்மேலும் மூழ்கச் செய்வது பொறுப்புள்ள செயல்தானா எனவும் காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.
இளைஞர்களை நல்வழிப்படுத்த வேண்டிய அரசு, போதையை அதிகரிப்பதிலும், பொழுதுபோக்கை விரிவுபடுத்துவதிலேயே தனது கவனத்தைச் செலுத்துவது என்ன மாதிரியான புரட்சிகரமான ஆட்சி நிர்வாகம்? திரைப்படத்திற்கும், போதைக்கும் பொழுதுபோக்குக்கும் முன்னுரிமை கொடுத்து எந்தச் சமூகம் வாழ்ந்து வளர்ந்திருக்கிறது? இதுதான் தமிழகத்துக்கு நீங்கள் கொண்டுவருவதாகச் சொன்ன மாற்றமா, முதலமைச்சர் அவர்களே? ஒரு நாட்டின் வளர்ச்சியைத் திரைப்படங்களின் வசூலைக் கொண்டு மட்டும் அளவிட முடியாது. அந்த நாட்டின் மக்கள் பெற்றுள்ள கல்வி, அறிவு, உடல்நலம், வேலைவாய்ப்பு, பொருளாதாரத் தன்னிறைவு ஆகியவற்றைக் கொண்டுதான் அளவிட முடியும் என்பதை ஆட்சியாளர்கள் உணர வேண்டும்.
திரைப்படக் காட்சிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதில் காட்டும் அக்கறையை, பள்ளிகளின் கல்வித்தரத்தை உயர்த்துவதிலும், நூலகங்களை மேம்படுத்துவதிலும், விளையாட்டுத் திடல்களை உருவாக்குவதிலும், புதிய தொழில்களைத் தொடங்குவதிலும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்குவதிலும் காட்டி மக்கள் நலனையும், சமூக முன்னேற்றத்தையும் முதன்மைப்படுத்தி ஆட்சி நடத்த வேண்டுமென சீமான் வலியுறுத்தியுள்ளார்.


