Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

எங்களின் இலக்கிய வளத்தை அழிக்க நினைக்கிறது ரஷ்யா.!! உக்ரைன் பகீர் குற்றச்சாட்டு

கீவ் : ரஷ்யாவின் ஏவுகணை தாக்குதலில் லட்சக்கணக்கான புத்தகங்கள் எரிந்து சாம்பலாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள உக்ரைன், தங்களின் இலக்கிய வளத்தை ரஷ்யா அழிக்க நினைப்பதாக குற்றம்சாட்டி உள்ளது.

உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா நடத்திய தொடர் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களில் சுமார் 1.2 கோடி (12 மில்லியன்) புத்தகங்கள் முற்றிலும் சேதமடைந்துள்ளதாக உக்ரைனில் இருந்து வெளிவரும் அதிகாரப்பூர்வத் தகவல்கள் தெரிவிக்கின்றன. புதிய கல்வி ஆண்டு தொடங்கவிருந்த நிலையில் இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

இது தொடர்பாக பேசி இருக்கும் உக்ரைன் அதிகாரிகள், தங்கள் நாட்டின் தலைநகர் கீவ் மற்றும் கார்கிவ் ஆகிய பகுதிகளில் உள்ள பிரபல புத்தகச் சந்தைகள், அச்சுக்கூடங்கள் மற்றும் புத்தகக் கிடங்குகளைக் குறிவைத்து ரஷ்யா இந்தத் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக குற்றம்சாட்டி உள்ளனர்.

சேதமடைந்த புத்தகங்களில் பள்ளிக் குழந்தைகளுக்காகப் புதிதாக அச்சிடப்பட்ட லட்சக்கணக்கான பள்ளிப் பாடப்புத்தகங்களும் அடங்கும். குறிப்பாக கீவ் நகரின் புறநகரில் உள்ள ஒரு முக்கிய அச்சகத்தில் மட்டும், மாணவர்களுக்கு விநியோகிக்கத் தயாராக இருந்த உக்ரைனின் ஒட்டுமொத்தப் பாடப்புத்தக தேவையில் 10% புத்தகங்கள் (சுமார் 12 லட்சம் புத்தகங்கள்) எரிந்து சாம்பலாகியுள்ளதாக கூறப்படுகிறது. ரஷ்யாவின் தாக்குதல்களால் உக்ரைனில் 35-க்கும் மேற்பட்ட பதிப்பகங்கள் மற்றும் விநியோக மையங்கள் மிக கடுமையாகச் சேதமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.