Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கிணற்றில் கார் விழுந்ததில் உயிரிழந்த 5 பேரின் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிவாரணம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!

சென்னை: சாத்தான்குளம் அருகே கிணற்றில் கார் விழுந்ததில் உயிரிழந்த 5 பேரின் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே கிணற்றில் கார் விழுந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்த 5 பேரது குடும்பத்தினருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்ததாவது; தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் வட்டம், மீரான்குளம்-2 கிராமத்தில் இன்று (17.5.2025) மாலை கோயம்புத்தூரிலிருந்து திருச்செந்தூர் வட்டம், வெள்ளாளன் விளை, மீரான்குளம் - சிந்தாமணி சாலையில் 8 நபர்களுடன் சென்றுகொண்டிருந்த கார் ஒன்று நிலை தடுமாறி சாலையின் அருகில் இருந்த கிணற்றில் எதிர்பாராதவிதமாக விழுந்ததில் ரவி கோயில்பிச்சை (வயது 60) த/பெ.சந்தோஸ், திருமதி.ஹெச்சியா கிருபாகரன் (வயது 49) க/பெ.ரவி கோயில்பிச்சை, மோசஸ் (வயது 50) த/பெ.தேவதாஸ், திருமதி.வசந்தா (வயது 49) க/பெ.மோசஸ் மற்றும் குழந்தை ஸ்டாலின் (15 வயது) த/பெ.கெர்சோம் ஆகிய ஐந்து நபர்கள் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.

மேலும், இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா மூன்று இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.