Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

நெல் குவிண்டாலுக்கு ரூ.2500 வழங்கப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சேலம்: சேலத்தில் இன்று காலை 1 லட்சம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் பிரமாண்ட விழாவில், ரூ.1,649 கோடியில் வளர்ச்சித்திட்ட பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்துப் பேசினார். அப்போது நெல் குவிண்டாலுக்கு ரூ.2500 ஆக உயர்த்தி வழங்கப்படும் என்று அறிவித்தார். மேட்டூர் அணையில் இருந்து இன்று காலை காவிரி டெல்டா பாசனத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தண்ணீரை திறந்து வைத்தார். இதன்மூலம் டெல்டா மாவட்டங்களில் 17.15 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதியை பெறுகிறது. இந்த அணை திறப்பு நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு, சேலம் இரும்பாலையில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வந்தார். வரும் வழியில் பொதுமக்களும், திமுகவினரும் முதல்வருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். ஓமலூர் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் சுமார் 1 கிலோ மீட்டருக்கு ரோடு ஷோ நடத்தினார்.

சேலம் அரசு மருத்துவக்கல்லூரி வளாகத்தில் நடந்த அரசு விழாவில், முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று 1 லட்சம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இதில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பால்வளத்துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் ரூ.200.26 கோடி மதிப்பீட்டில் 225 முடிவுற்ற பணிகளை முதல்வர் திறந்து வைத்தார். மேலும், கைத்தறி மற்றும் துணிநூல் துறை சார்பில் ஒருங்கிணைந்த ஜவுளிப்பூங்கா, பள்ளிக்கல்வித்துறை சார்பில் புதிய நூலகக்கட்டிடம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் ரூ.1,244.28 கோடி மதிப்பீட்டில் 509 புதிய திட்டப்பணிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

அதேபோல், வருவாய்த்துறை சார்பில் வீட்டுமனைப்பட்டா, நகர நிலவரி பட்டா, மகளிர் திட்டம், கூட்டுறவுத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் மொத்தம் 1,01,203 பயனாளிகளுக்கு ரூ.204.64 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் முதல்வர் வழங்கினார். மொத்தமாக ரூ.1,649.18 கோடியில் பல்வேறு புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்து, அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமாக இருக்கக்கூடிய டெல்டா மாவட்டத்திற்கு உயிர்நாடி காவிரி நீர் தான்.

அந்த காவிரி நீரை தேக்கி வைத்து மேட்டூர் அணையை கடந்த 4 ஆண்டுகளாக குறித்த தேதியில் திறந்து வைத்து விவசாயிகளின் வயிற்றில் பால் பார்த்த மகிழ்ச்சியில் சேலம் வந்துள்ளேன். உங்களை எல்லாம் பார்க்கும்போது எனக்கு மகிழ்ச்சி பொங்குகிறது. இந்த மகிழ்ச்சியை குறிப்பாக உழவர்களுக்கு மகிழ்ச்சியை கூட்டும் வகையில் தொடக்கத்திலேயே ஒரு அறிவிப்பை வெளியிட விரும்புகிறேன். விவசாயிகள் இனி குவிண்டாலுக்கு ரூ.2500 பெறுவார்கள். அதற்கு ஏற்றாற்போல் சாதாராண ரகத்திற்கு 131, சன்னரகத்திற்கு 156 இனி உயர்த்தி வழங்கப்படும். இதனால் சாதாரண ரகம் ரூ.2500க்கும், சன்னரகம் ரூ.2545க்கும் கொள்முதல் செய்யப்படும். இதனால் 10 லட்சம் விவசாயிகள் பயனடைவார்கள். இவ்வாறு அவர் பேசினார்.