Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

திருச்சியில் சாலை விபத்தில் உயிரிழந்த முசிறி கோட்டாட்சியர் ஆரமுத தேவசேனா குடும்பத்துக்கு ரூ.15 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு..!!

சென்னை: திருச்சியில் சாலை விபத்தில் உயிரிழந்த முசிறி கோட்டாட்சியர் ஆரமுத தேவசேனா குடும்பத்துக்கு ரூ.15 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள இரங்கல் குறிப்பில், திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், மேக்குடி கிராமம், கரூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலை, கடியாக்குறிச்சி பேருந்து நிறுத்தம் அருகில் முசிறி வருவாய் கோட்டாட்சியர் ஆரமுத தேவசேனா இன்று (19.06.2025) காலை 11.45 மணியளவில் TN 45 G 1798 என்ற பதிவெண் கொண்ட நான்கு சக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது,

எதிரே திருச்சியிலிருந்து திருப்பூர் நோக்கி சென்றுகொண்டிருந்த அரசுப்பேருந்து மோதியதில் முசிறி வருவாய் கோட்டாட்சியரின் நான்குசக்கர வாகனம் நிலைதடுமாறி அருகில் பழுது பார்ப்பதற்காக நின்று கொண்டிருந்த ஜேசிபி வாகனம் மீது எதிர்பாதாராதவிதமாக மோதி விபத்துக்குள்ளானதில் முசிறி வருவாய் கோட்டாட்சியர் ஆரமுத தேவசேனா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், வேதனையுமடைந்தேன். முசிறி வருவாய் கோட்டாட்சியர் ஆரமுத தேவசேனா உயிரிழப்பு வருவாய்த் துறைக்கும், அவரது குடும்பத்தினருக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.

ஆரமுத தேவசேனாவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், அவரது உறவினர்கள் மற்றும் அவருடன் பணிபுரிபவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். ஆரமுத தேவசேனா குடும்பத்தினருக்கு தமிழ்நாடு அரசு அண்மையில் அறிவித்த அரசு அலுவலர்களுக்கான காப்பீட்டுத் தொகை ரூபாய் ஒரு கோடி பெற்று வழங்கப்படும். மேலும், அவரது குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து பத்து லட்சம் ரூபாய் மற்றும் குடும்ப பாதுகாப்பு நிதியிலிருந்து ஐந்து லட்சம் ரூபாய் வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.