காத்மாண்டு: இந்தியாவால் வழங்கப்பட்ட அவசரக்கால நிவாரணப் பொருட்களை, வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட நுவாகோட் உள்ளிட்ட மாவட்டங்களில் நேபாள ராணுவம் தீவிரமாக விநியோகித்து வருகிறது. நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக இந்தியாவிலிருந்து அனுப்பப்பட்ட கூடாரங்கள், போர்வைகள், படுக்கைப்பைகள், மருத்துவப் பொருட்கள் மற்றும் தண்ணீரைச் சுத்திகரிக்கும் மாத்திரைகள் போன்ற பல டன் நிவாரணப் பொருட்களை இந்தியா அனுப்பி வைத்தது.
இதனை பெற்று கொண்ட நேபாள ராணுவம் நுவாகோட்டில் உள்ள ராணுவ முகாம்கள் மூலம் பாதிக்கப்பட்ட மற்றும் உதவி தேவைப்படும் மக்களுக்கு விநியோகித்து வருகிறது. இதனிடையே மீட்புப் பணிகளுக்கு உதவவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவச் சிகிச்சை அளிக்கவும், இந்திய மருத்துவ மற்றும் தொழில்நுட்ப மீட்புக் குழுவினர் நேபாள ராணுவத்துடன் இணைந்து களத்தில் பணியாற்றி வருகின்றனர்.
இதுவரை இந்தியா நான்கு விமான சேவைகள் மூலம் மொத்தம் 68.5 டன் அவசரக்கால நிவாரணப் பொருட்களை நேபாளத்திற்கு அனுப்பியுள்ளது. அதே போல போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ள பகுதிகளில் இணைப்பை மீண்டும் ஏற்படுத்த, 230 அடி நீளமுள்ள ஒற்றை வழி எஃகு பாலத்திற்கான பாகங்களையும் இந்தியா, அங்கு அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.



