வீதியில விவாதம் செய்யாதீங்க; நாடாளுமன்றத்துக்கு வாங்க பாக்கலாம்; ராகுலுக்கு பதில் சவால் விட்ட அமித் ஷா
சண்டிகர்: ஹரியானாவில் நடைபெற்ற ஜனநாயகத்தைக் காப்போம், அராஜகத்தை ஒழிப்போம் என்ற பேரணியில், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்றார். இந்த நிகழ்வின் போது பேசிய அவர் பிரதமர் மோடியை விவாதத்திற்கு அழைத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சாடியுள்ளார்.
வீதிகளில் விவாதம் செய்வதற்குப் பதிலாக, நாடாளுமன்றத்திற்கு வந்து விவாதிக்குமாறு அவர் ராகுல் காந்திக்கு சவால் விடுத்தார். இது தொடர்பாக அவர் பேசியதாவது, நான் இந்த இடத்தில இருந்து ராகுல் காந்திக்கு ஒரு சவால் விடுக்க விரும்புகிறேன். நீங்கள் நரேந்திர மோடி ஜியிடம் விவாதத்திற்குச் சவால் விடுக்கிறீர்கள் அல்லவா?
ராகுல் ஜி, இதற்காக மோடி ஜி நேரில் வர வேண்டிய அவசியமில்லை; உங்களுக்கு விவாதம் நடத்த விருப்பம் இருந்தால், அவருக்கு ஒரு கடிதம் எழுதுங்கள் போதும். இந்த விவாதத்தை நடத்துவதற்காக நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தொடரை கூட்டுவதற்கு, நாங்கள் தயாராக இருக்கிறோம். நாம் அங்கு விவாதிப்போம்; அங்கு அனைத்து விவகாரங்கள் குறித்தும் பேசுவோம் வாருங்கள்.
அதை விடுத்தது நீங்கள் பொய்களைப் பரப்புவதை நிறுத்துங்கள் என்றார். முன்னதாக நவம்பர் 3 அன்று, ராகுல் காந்தி இரண்டாவது முறையாக பிரதமர் மோடியை விவாதத்திற்கு அழைத்திருந்த நிலையில், இந்த பதிலடி அமித் ஷா-விடமிருந்து வந்துள்ளது. இதனிடையே அந்த கூட்டத்தில் தொடர்ந்து பேசிய அமித் ஷா, தலைமைத் தேர்தல் ஆணையர் பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி விடுத்துள்ள கோரிக்கையையும் விமர்சித்தார்.
"2014-ல் 'எஸ்.ஐ.ஆர்' (SIR) எங்கே இருந்தது? அப்போதே நீங்கள் முற்றிலும் துடைத்தெறியப்பட்டீர்கள். 2019-ல் 'எஸ்.ஐ.ஆர்' எங்கே இருந்தது? நீங்கள் தோற்றீர்கள். 2024-லும் 'எஸ்.ஐ.ஆர்' இல்லை, அப்படியிருந்தும் மீண்டும் தோற்றீர்கள். ஹரியானாவிலோ அல்லது மகாராஷ்டிராவிலோ 'எஸ்.ஐ.ஆர்' இல்லை... நீங்கள் எல்லா இடங்களிலும் தோற்றீர்கள். நாடாளுமன்றத்தைச் செயல்பட விடாமல், தெருக்களில் கூட்டத்தைக் கூட்டி குழப்பத்தை விளைவிக்கிறீர்கள்; இது ஒருவித அராஜகத்தைப் போன்றது. நாடாளுமன்றத்தில் வெறும் கூச்சலையும் குழப்பத்தையும் உருவாக்கி, புறக்கணிப்பு நாடகங்களை மட்டுமே அரங்கேற்றுகிறீர்கள்" என்று காங்கிரஸ் மற்றும் ராகுல் காந்தியை காட்டமாக விமர்சித்தார்.


