Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

காயிதே மில்லத் 130வது பிறந்தநாள்.. நாட்டுப்பற்றிலும் மொழிப்பற்றிலும் எஃகு போன்ற உறுதியைக் காட்டிய கண்ணியத்தென்றல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்!!

சென்னை: காயிதே மில்லத் 130வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் என்று போற்றப்படும் முகம்மது இசுமாயில் சாகிபு இந்தியாவின் முக்கியமான அரசியல் தலைவர்களுள் ஒருவர் ஆவார். காயிதே மில்லத்தின் 130வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. காயிதே மில்லத்தின் பிறந்தநாளையொட்டி அவரது நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

சென்னை திருவல்லிக்கேணி வாலாஜா சாலையில் உள்ள பெரிய பள்ளிவாசல் வளாகத்தில் உள்ள காயிதே மில்லத் நினைவிடத்தில் மலர் போர்வை அணிவித்து, மலர் தூவி முதல்வர் மரியாதை செலுத்தினார். முதலமைச்சருடன் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, தா.மோ.அன்பரசன் உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர்.

இதைத்தொடர்ந்து காயிதே மில்லத் பிறந்த நாளை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் தலைவர்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர். அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், பெஞ்சமின் ஆகியோர் மரியாதை செலுத்தினர். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை ஆகியோரும் மரியாதை செலுத்தினர்.

இதையடுத்து காயிதே மில்லத் 130வது பிறந்த நாளையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பதிவில் கூறியதாவது; எவரும் குறைகாண முடியாத அப்பழுக்கற்ற வாழ்க்கைக்குச் சொந்தக்காரர் - இஸ்லாமிய சமூகத்தின் இணையற்ற தலைவர் - தந்தை பெரியாரால் அரிய தலைவர் எனப் போற்றப்பட்டவர் - தலைவர் கலைஞரின்மீது அன்பைப் பொழிந்தவர் - 1967-இல் கழகம் ஆட்சியமைக்கத் துணைநின்றவர் - நாட்டுப்பற்றிலும் மொழிப்பற்றிலும் எஃகு போன்ற உறுதியைக் காட்டிய கண்ணியத்தென்றல் காயிதே மில்லத் அவர்களின் பிறந்தநாள்!

காயிதே_மில்லத் அவர்கள் பிறந்த திருநெல்வேலி மாவட்டத்தில் அமையவுள்ள மாபெரும் நூலகத்துக்கு அவரின் பெயர் சூட்டப்படும் என அறிவித்த மனநிறைவோடு அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்தினேன். இவ்வாறு தெரிவித்தார்.