பிஷ்கெக்: அவசியமான சூழலை தவிர மற்ற நேரங்களில் அதாவது தேவையற்ற சூழலில் தங்கம் வாங்குவதைத் தவிர்க்குமாறு இந்திய மக்களை பிரதமர் நரேந்திர மோடி கேட்டு கொண்டுள்ளார். உஸ்பெகிஸ்தான் மற்றும் கிர்கிஸ்தான் ஆகிய நாடுகளுக்கான பயணத்தின் ஒரு பகுதியாக, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) உச்சிமாநாட்டில் பங்கேற்கப் பிரதமர் தற்போது பிஷ்கெக் நகரில் உள்ளார்.
இந்த நிலையில் பிரதமர் மோடி தனது சமீபத்திய இன்ஸ்டா வீடியோவில் மிகவும் அவசியமென்றால் தவிர தங்கம் வாங்குவதைத் தவிர்க்குமாறும், அத்துடன் வெளிநாட்டுப் பொழுதுபோக்கு பயணங்களைக் குறைத்துக் கொள்ளுமாறும், வெளிநாடுகளுக்கு சென்று திருமணம் செய்வதை குறைத்து கொள்ளுமாறும் மக்களை வலியுறுத்தி உள்ளார்.
வெளிநாடுகளுக்குச் சென்று திருமணம் செய்வதற்குப் பதிலாக, இந்தியாவிலேயே திருமணங்களை நடத்தும் 'வெட் இன் இந்தியா' (Wed in India) இயக்கத்தை ஊக்குவிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். வீடியோவில் பேசி இருக்கும் பிரதமர் மோடி நாம் எந்த அளவுக்கு உள்நாட்டு பொருட்களுக்கும், தற்சார்பு நிலைக்கும் முக்கியத்துவம் கொடுக்கிறோமோ, அந்த அளவுக்கு இந்தியா தனது 100-வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் போது நமது இளைய தலைமுறைக்கு ஒரு வளர்ந்த இந்தியாவை உருவாக்க முடியும்" என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் (Q1) நாட்டின் பொருளாதார வளர்ச்சி (GDP) 7.8 சதவீதமாக பதிவானதைத் தொடர்ந்து, செல்ஃபி பாணி வீடியோவை பிரதமர் மோடி தனது இன்ஸ்டா பேஜில் பகிர்ந்துள்ளார். உலகளாவிய சவால்கள் மற்றும் விநியோக சங்கிலி தடங்கல்களுக்கு மத்தியிலும், இந்தியப் பொருளாதாரம் 7.8% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதற்கு நாட்டு மக்களுக்குப் பாராட்டு தெரிவித்து கொள்வதாக கூறியுள்ளார்.
"இந்தியா வேகமாக முன்னேறி வருகிறது. அதே வேளையில், இந்தியாவிற்குள்ளேயே விரக்தியில் மூழ்கியிருப்பவர்கள் 'பொய்யின் எதிரொலியை' எங்கும் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். இவையனைத்தையும் கடந்து, அந்தச் சவால்களை முறியடித்து, நாடு 7.8 சதவீத வளர்ச்சியை எட்டியுள்ளது. நாம் இந்த வேகத்தைத் தக்கவைக்க வேண்டும் என மறைமுகமாக எதிர்க்கட்சியான காங்கிரசை பிரதமர் மோடி சாடினார்.அவசியமற்ற தங்கக் கொள்முதலைக் குறைப்பதன் மூலம் நாட்டின் அந்நியச் செலாவணி இருப்பைப் பாதுகாக்கவும், இந்திய ரூபாயின் மதிப்பை வலுப்படுத்தவும் தங்கம் தொடர்பான வேண்டுகோளை பிரதமர் மக்களுக்கு வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.




