CCTNS-ஐ வெற்றிகரமாக பயன்படுத்தும் 17,000-க்கும் மேற்பட்ட காவல் நிலையங்கள்... ஒன்றிய உள்துறை அமைச்சகம் தகவல்
டெல்லி: நாட்டில் உள்ள 17,000-க்கும் மேற்பட்ட காவல் நிலையங்கள் 'கிரைம் & கிரிமினல் டிராக்கிங் நெட்ஒர்க் அன்ட் சிஸ்டம்ஸ்'-ஐ (CCTNS) பயன்படுத்துவதாக மத்திய உள்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் பண்டி சஞ்சய் குமார், நாடாளுமன்றத்தில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் இந்த தகவலை தெரிவித்து உள்ளார்.
காவல் நிலையங்கள் CCTNS-ஐ பயன்படுத்துவதன் மூலம் குற்றம் மற்றும் குற்றவாளிகள் தொடர்பான தரவுகளை நிகழ்நேரத்திற்கு மிக நெருக்கமான அடிப்படையில் சேகரிக்கவும், புதுப்பிக்கவும் மற்றும் பகுப்பாய்வு செய்யவும் முடிவதாக ஒன்றிய உள்துறை அமைச்சகம் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.
மாநிலங்களவை உறுப்பினர் சம்பு சரண் படேல் எழுப்பி இருந்த கேள்விக்கு எழுத்துபூர்வமாக பதிலளித்த ஒன்றிய உள்துறை இணையமைச்சர் பண்டி சஞ்சய் குமார், "ஜூன் 1, 2026 நிலவரப்படி, மொத்தம் உள்ள 17,762 காவல் நிலையங்களும் CCTNS அமைப்பைப் பயன்படுத்துகின்றன" என்று கூறினார். மேலும், குற்றம் மற்றும் குற்றவாளிகள் தொடர்பான தரவுகளை உடனுக்குடனான அடிப்படையில் (near real-time basis) சேகரிக்கவும், புதுப்பிக்கவும் மற்றும் பகுப்பாய்வு செய்யவும் இந்த அமைப்பு உதவுகிறது.
CCTNS அமைப்பானது மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் காவல் படைகள், மத்திய சட்ட அமலாக்க முகமைகள் (CLEAs) போன்ற அமைப்புகளுக்கு பல்வேறு நன்மைகளை வழங்குவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
CCTNS- ன் சில முக்கிய செயல்பாடுகள்;
- குற்றங்கள் மற்றும் குற்றவாளிகள் பற்றிய பதிவுகளை உடனுக்குடன் சேகரித்து, புதுப்பித்து, பகுப்பாய்வு செய்கிறது.
- புகார்கள், முதல் தகவல் அறிக்கைகள் (FIR), புலனாய்வு விவரங்கள் மற்றும் குற்றப்பத்திரிகைகளை டிஜிட்டல் முறையில் கையாள்கிறது.
- காவல் துறைத் தரவுகளை நீதிமன்றங்கள், சிறைச்சாலைகள், தடய அறிவியல் ஆய்வகங்கள் மற்றும் அரசுத் தரப்பு அலுவலகங்களுடன் இணைக்கிறது.

