சென்னை: தஞ்சை மாவட்டம் சாக்கோட்டையில் நம்மாழ்வார் பெயரில் உயிர்ம வேளாண்மை பட்டய படிப்பு கல்லூரி அமைக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு உள்ளது. கோழி கழிவுகளை உலர்த்தி பொடியாக்கி மண்வளத்தை மேம்படுத்தும் தொழில்நுட்பங்களை வழங்க ரூ.1 கோடி வழங்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
உதகையில் இருக்கும் வேளாண் மையம் ரூ.10 கோடியில் தரம் உயர்த்தப்படும் என்றும் வேளாண்துறை அமைச்சர் வினோத் கூறியுள்ளார். மா, மிளகாய், மஞ்சள் ஆகியவற்றுக்கு தொழில்நுட்ப மையம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. உழவர் சந்தைகளை புனரமைக்க ரூ.20 கோடி நிதி ஒதுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறு பால் பண்ணை அமைக்க ரூ.4.19 கோடி நிதி ஒதுக்கப்படும். மக்காச்சோள உற்பத்தி மேம்பாட்டு திட்டத்திற்கு ரூ.36 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கதிரடிக்கும் களங்கள் அமைக்க ரூ.2.8 கோடி மானியம் வழங்கப்படும். காஞ்சிபுரம், திருச்சி, தூத்துக்குடியில் தலா 500 மெட்ரிக் டன் குளிர்பதன கிடங்கு அமைக்கப்படும். காய்கறிகளின் விலை மாற்றத்தால் பாதிப்பு ஏற்படாமல் இருக்க விலை நிலைப்படுத்துதல் நிதி வழங்கப்படும்.
2026-27 நிதியாண்டில் மூலதன கடன் வழங்க ரூ.3,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. வேளாண் துறை மூலம் மாநிலம் முழுவதும் 37.51 லட்சம் மரங்கள் நடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. வேளாண்துறை சார்பாக 5 லட்சம் சந்தன மரங்கள், 51,000 தேக்கு மரங்களை வளர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.


