Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
Chettinad Cements
search-icon-img
Advertisement

தமிழகத்தில் 11 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

* இந்த கல்வியாண்டு முதல் செயல்படும்

* 9150 மாணவர்கள் பயன்பெறுவார்கள்

சென்னை: உயர்கல்வித் துறை சார்பில் 2025-26ம் கல்வியாண்டு முதல் செயல்படும் வகையில், கடலூர் மாவட்டம் - பண்ருட்டி, நீலகிரி மாவட்டம் - குன்னூர், திண்டுக்கல் மாவட்டம் - நத்தம், சென்னை-ஆலந்தூர், விழுப்புரம் மாவட்டம்- விக்கிரவாண்டி, செங்கல்பட்டு மாவட்டம் - செய்யூர், சிவகங்கை மாவட்டம் - மானாமதுரை, திருவாரூர் மாவட்டம்- முத்துப்பேட்டை, தஞ்சாவூர் மாவட்டம் - திருவிடைமருதூர், பெரம்பலூர் மாவட்டம் - கவுக்காநத்தம் மற்றும் தூத்துக்குடி மாவட்டம் - ஒட்டப்பிடாரம் ஆகிய இடங்களில் 11 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை தலைமை செயலகத்தில் இன்று காலை நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

தமிழ்நாட்டில் உயர்கல்வியை மேம்படுத்தும் நோக்கில், அதிக எண்ணிக்கையிலான உயர்கல்வி நிறுவனங்களை தொடங்குதல், அதன் வாயிலாக ஆராய்ச்சி, புதுமைப்படைப்புகள், தொழில்நுட்ப வளர்ச்சி ஆகியவற்றில் மாணவர்களின் திறன்களை வளர்த்து, வேலைவாய்ப்பினை உறுதி செய்தல், ‘நான் முதல்வன்’ திட்டத்தின் மூலம் தகுதிவாய்ந்த திறன்மிகு இளைஞர்களை உருவாக்குதல், அரசுப் பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை படித்த மாணவிகள் உயர்கல்வி பயில ‘புதுமைப் பெண்’ திட்டம் மற்றும் மாணவர்கள் உயர்கல்வி பயில ‘தமிழ்ப்புதல்வன்’ திட்டம் ஆகிய திட்டங்களின் கீழ் மாதம் ரூ.1000 உதவித் தொகை வழங்குதல், முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு சலுகைகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் போன்ற பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருவதால் அகில இந்திய அளவில் உயர்கல்வி சேர்க்கையில் தமிழ்நாடு முதலிடம் வகித்து வருகிறது.

ஏழை எளிய கிராமப்புற மாணவ, மாணவியர்களின் உயர்கல்வித் தேவையை நிறைவு செய்யும் வகையில் 2025-26ம் ஆண்டிற்கான உயர்கல்வித் துறை மானியக் கோரிக்கையில், நீலகிரி மாவட்டம் - குன்னூர், திண்டுக்கல் மாவட்டம்- நத்தம், சென்னை மாவட்டம் - ஆலந்தூர், விழுப்புரம் மாவட்டம்- விக்கிரவாண்டி, செங்கல்பட்டு மாவட்டம் - செய்யூர், சிவகங்கை மாவட்டம்- மானாமதுரை, திருவாரூர் மாவட்டம் - முத்துப்பேட்டை, தஞ்சாவூர் மாவட்டம் - திருவிடைமருதூர், பெரம்பலூர் மாவட்டம்- கொளக்காநத்தம் மற்றும் தூத்துக்குடி மாவட்டம் - ஒட்டப்பிடாரம் ஆகிய இடங்களில் 10 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

மேலும், கடலூரில் கடந்த பிப்ரவரி 21ம்தேதி நடைபெற்ற அரசு விழாவில், முதல்வர் மு.க.ஸ்டாலின் கடலூர் மாவட்டம் - பண்ருட்டியில் புதிய அரசு கலை மற்றும் அறிவியில் கல்லூரி தொடங்கப்படும் என்று அறிவித்தார்.

அந்த அறிவிப்பின்படி, 2025-26ம் கல்வியாண்டு முதல் செயல்படும் வகையில், 11 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை முதல்வர் தொடங்கி தொடங்கி வைத்தார். இப்புதிய கல்லூரிகள் ஒவ்வொன்றும் தலா 5 பாடப்பிரிவுகளுடன் தொடங்கப்படும். மேலும், ஒவ்வொரு கல்லூரிக்கும் 12 ஆசிரியர்கள் (உதவிப் பேராசிரியர்கள் பணியிடங்கள் முதலாமாண்டிற்கு மட்டும்) மற்றும் 14 ஆசிரியரல்லாப் பணியிடங்கள் வீதம் 11 கல்லூரிகளுக்கு மொத்தம் 132 ஆசிரியர்கள் மற்றும் 154 ஆசிரியரல்லாப் பணியிடங்களைத் தோற்றுவித்து, 11 கல்லூரிகளுக்கு ஓராண்டுக்கான தொடர் மற்றும் தொடராச் செலவினத்திற்காக மொத்தம் ரூ.25 கோடியே 27 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு கல்லூரிக்கும் 5 பாடப்பிரிவுகளில் ஓராண்டுக்கு 3050 மாணவர்கள் வீதம் 3 ஆண்டுகளுக்கு 9150 மாணவர்கள் பயன்பெறுவார்கள்.

முதல்வரால் தொடங்கி வைக்கப்பட்ட இப்புதிய 11 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை சேர்த்து, தமிழ்நாட்டில் தற்போது செயல்பட்டு வரும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் எண்ணிக்கை 176 ஆக உயர்ந்துள்ளது. இந்நிகழ்ச்சியில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் கோவி. செழியன், டி.ஆர்.பி. ராஜா, தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம், உயர்கல்வித் துறை செயலாளர் சி.சமயமூர்த்தி, கல்லூரி கல்வி ஆணையர் சுந்தரவல்லி, பொதுப்பணித் துறை தலைமை பொறியாளர் (தொழில்நுட்ப பிரிவு), வெ. சுகுமாரன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.