Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நீட் முதுநிலை தேர்வை ஆகஸ்ட் 3ம் தேதி ஒரே கட்டமாக நடத்த தேர்வு வாரியத்திற்கு உச்சநீதிமன்றம் அனுமதி!!

புதுடெல்லி: நீட் முதுநிலை தேர்வை ஆகஸ்ட் 3ம் தேதி ஒரே கட்டமாக நடத்தத் தேர்வு வாரியத்திற்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. நீட் முதுநிலை மருத்துவ நுழைவுத் தேர்வு ஜூன் 15ம் தேதி நாடு முழுவதும் நடைபெறஉள்ளது. இத்தேர்வு காலை 9 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை முதற்கட்டமாகவும், அதேநாளில் மாலை 3.30 மணி முதல் முதல் இரவு 7 மணி வரை இரண்டாம் கட்டமாகவும் நடைபெறவுள்ளது. ஆனால் 2024ம் ஆண்டில் இதேபோன்று தேர்வு நடத்தப்பட்டதில் முதற்கட்ட தேர்வு எளிமையாக இருந்ததாகவும், இரண்டாம் கட்ட தேர்வு சற்று கடினமாக இருந்ததாக தேர்வு எழுதிய மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்த பிரச்னைகளை அடிப்படையாக கொண்டு நடப்பாண்டிலும் இரண்டு கட்டங்களாக நீட் முதுநிலை நுழைவு தேர்வை ஒன்றிய அரசு நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மேற்கண்ட வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதி விக்ரம் நாத் தலைமையிலான அமர்வில் விசாரிக்கப்பட்டு வந்தது. அப்போது நீதிபதிகள், நீட் முதுநிலை தேர்வு ஒரேகட்டமாகதான் நடத்தப்பட வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

இந்த நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்வு வாரியம் தரப்பில்" 2.20 லட்சம் மாணவர்கள் தேர்வை எழுதுகின்றனர். தேர்வை ஒரே ஷிப்ட் அடிப்படையில் நடத்தினால், தற்போது உள்ள தேர்வு மையங்களை விட 450 கூடுதல் மையங்கள் தேவைப்படும். எனவே தேர்வை ஆகஸ்ட் 3ம் தேதி நடத்த அனுமதிக்க வேண்டும். தேர்வு மையங்களை கண்டறிந்து அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள கூடுதல் அவகாசம் தேவைப்படுகிறது,"எனத் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து பேசிய நீதிபதிகள், கூடுதல் கால அவகாசம் வழங்கி உத்தரவிடப்படுகிறது. நீட் முதுநிலைத் தேர்வை ஆகஸ்ட் 3ம் தேதி நடத்தலாம். ஆகஸ்ட் 3ம் தேதிக்கு பிறகு கூடுதல் அவகாசம் வழங்கப்படாது. அன்றே தேர்வை நடத்த வேண்டும் என்று தெரிவித்தனர்.