Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

மார்ச் 22,23ம் தேதிகளில் நம்ம ஊரு திருவிழாவிற்கான கலைக்குழுக்கள் தேர்வு நடைபெறும் என அறிவிப்பு

சென்னை: தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத்துறை சார்பில் சென்னையில், பொங்கல் விழாவின்போது தமிழ்நாட்டின் நாட்டுப்புறக் கலைகள், அயல் மாநில நாட்டுப்புறக் கலைகள், செவ்வியல் கலைகள் இடம் பெறும் வகையில் சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழா சென்னையில் 18 இடங்களில் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு கோயம்புத்தூர், தஞ்சாவூர், வேலூர், சேலம், திருநெல்வேலி, காஞ்சிபுரம், மதுரை மற்றும் திருச்சிராப்பள்ளி ஆகிய 8 இடங்களில் சங்கமம்-நம்ம ஊரு திருவிழா’ நடத்தப்பட்டது.

இவ்வாண்டும் மேற்காண் 8 இடங்களிலும் இக்கலை திருவிழா நடத்தப்பட உள்ளது. இவ்விழாவில் நிகழ்ச்சி நடத்த விரும்பும் கலைக்குழுக்களுக்களின் நிகழ்ச்சி பதிவு தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் மார்ச் 22 மற்றும் 23 ஆகிய நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மேற்கொள்ளப்பட உள்ளது.

நையாண்டி மேளம், கரகாட்டம், காவடியாட்டம், புரவி, காளை, மயிலாட்டம், பறை, பம்பை கைச்சிலம்பு, இறை நடனம், துடும்பாட்டம், ஜிக்காட்டம், கிராமிய பாட்டு மற்றும் பல்சுவை நிகழ்ச்சி வழங்கும் கலைக்குழுக்கள் மார்ச் 22 சனிக்கிழமை அன்றும் தெருக்கூத்து, இசை நாடகம், நாடகம், கனியான்கூத்து, பொம்மலாட்டம், தோல் பாவைக்கூத்து, வில்லுப்பாட்டு தேவராட்டம், ஒயிலாட்டம், சிலம்பாட்டம், மல்லர் கம்பம், கும்மி, கோலாட்டம், மரக்கால் ஆட்டம், பரதநாட்டியம், பழங்குடியினர் நடனம் நிகழ்ச்சி நடத்துவோர் மற்றும் இதர கலைக்குழுக்களின் நிகழ்ச்சிகள் மார்ச் 23 ஞாயிறு அன்றும் பதிவு செய்யப்படும்.

மாவட்ட அளவிலானத் தேர்வில் பங்கு பெற விரும்பும் கலைக் குழுக்கள் கலை பண்பாட்டுத் துறையின் இணையதளத்தில் (www.artandculture.tn.gov.in ) வெளியிடப்பட்டுள்ள கூகுள் பார்ம் (Google Form) மூலம் மார்ச் 20 ஆம் தேதி மாலைக்குள் விண்ணப்பிக்கலாம் அல்லது இணையத்தளத்தில் அனைத்து மாவட்டத்திற்கான பொறுப்பாளர் எண்கள் அளிக்கப்பட்டுள்ளது. தங்கள் மாவட்டத்திற்கான பொறுப்பாளரைத்தொடர்புக் கொண்டு பதிவு செய்துக்கொள்ளலாம் கலைஞர்களின் கோரிக்கையின் அடிப்படையில் 38 மாவட்டங்களிலும் கலைக்குழுக்களின் நிகழ்ச்சி பதிவு செய்யப்பட உள்ளது. இப்பதிவுக்கு வரும் கலைஞர்களுக்கு மதிப்பூதியம்,போக்குவரத்து செலவினங்கள் வழங்கப்படாது.

ஒவ்வொரு கலைக்குழுவின் 5 நிமிட வீடியோ பதிவு செய்யப்பட்டு கலை பண்பாட்டுத் துறையால் அமைக்கப்படும் தேர்வுக் குழுவால் தமிழ்நாட்டில் 8 இடங்களில் நடைபெற உள்ள சங்கமம் திருவிழாவில் நிகழ்ச்சி வழங்குவதற்கான கலைக்குழுக்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இவ்விழாக்களில் சிறப்பான நிகழ்ச்சி வழங்கிய கலைக்குழுவினர் மாநில அளவிலான தேர்வுக்குழுவால் தெரிவு செய்யப்பட்டு 2026 ஆம் ஆண்டு சென்னை சங்கமம் விழாவில் வாய்ப்பு பெறுவார்கள்.

கலை பண்பாட்டுத்துறை அளித்துள்ள இந்த வாய்ப்பினை அனைத்து நிகழ்த்துக்கலை கலைஞர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கவிதா ராமு இயக்குநர் (மு.கூபொ), கலை பண்பாட்டுத்துறை அவர்கள் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.