போபால்: 'ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக் கொள்ளாது என்பதை தெளிவுபடுத்தியது' என பிரதமர் மோடி தெரிவித்தார். மத்தியப் பிரதேசத்தின் தலைநகர் போபாலில் நடைபெற்ற 18 ஆம் நூற்றாண்டின் மால்வா ராஜ்ஜியத்தின் புகழ்பெற்ற ராணி லோகமாதா தேவி அஹில்யாபாய் ஹோல்கரின் 300-வது பிறந்தநாள் விழா கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடிகலந்து கொண்டார். அஹில்யாபாய் ஹோல்கரின் 300-வது பிறந்தநாள் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, அஞ்சலி செலுத்தும் வகையில், அஞ்சல் தலை மற்றும் ரூ.300 மதிப்புள்ள நினைவு நாணயத்தையும் பிரதமர் வெளியிட்டார். மேலும் போபாலில் ரூ.1,300 கோடியில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்தார்.
பின்னர் நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர்; மக்களுக்கு சேவை செய்வதும் அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதும் தான் ஆட்சி என்பதன் உண்மையான அர்த்தம் என்று புகழ்பெற்ற ராணியும், சமூக சீர்திருத்தவாதியுமான தேவி அஹில்யாபாய் கூறியுள்ளார். இன்று, நீங்கள் காசி சென்றால், அங்கு தேவி அஹில்யாபாயின் சிலையையும் காண்பீர்கள். பெண்கள் தலைமையிலான வளர்ச்சி என்ற தொலைநோக்குப் பார்வையை அனைத்து வளர்ச்சி திட்டங்களில் நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு உள்ளோம். எங்கள் தாய்மார்கள், சகோதரிகள், மகள்கள் அரசாங்கத்தின் அனைத்து பெரிய வளர்ச்சித் திட்டங்களிலும் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.
பாகிஸ்தான் மறைமுகமாகப் பயங்கரவாதத்துக்கு ஆதரவு தெரிவித்து வருவதை, இனி இந்தியா ஒருபோதும் பார்த்துக் கொண்டு இருக்காது. பாகிஸ்தான் நடத்தும் ஒவ்வொரு தாக்குதலுக்கு பதில் தாக்குதல் திருப்பிக் கொடுக்கப்படும். பஹல்காமில் பயங்கரவாதிகள் நம்முடைய கலாசாரம் மீது தாக்குதல் நடத்தினர். நம்முடைய சமூகம் பிளவுப்பட வேண்டும் என முயற்சித்தனர். அவர்கள் இந்தியாவின் பெண் சக்திக்கு சவால் விடுத்தனர். அந்த சவாலை பயங்கரவாதிகளுக்கான கெட்ட கனவாக பெண்கள் மாற்றி விட்டனர். பயங்கரவாதிகளின் எல்லைக்குள்ளேயே இனி நாம் சென்று தாக்குதல் நடத்துவோம். பயங்கரவாதிகளை ஆதரிப்பவர்களும் அதற்கான கடுமையான விலையை கொடுக்க வேண்டியிருக்கும்.
140 கோடி இந்தியர்களின் முதல் தீர்மானம். பாகிஸ்தானின் ஒவ்வொரு துப்பாக்கித் தோட்டாக்களுக்கு நம்மிடமிருந்து பீரங்கி குண்டுகளால் பதிலடி தரப்பட்டுள்ளது என்று கூறினார்.

