Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அமைச்சர் செந்தில் பாலாஜி மீது அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கிற்கு தடை கோரிய மனு தள்ளுபடி: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான அமலாக்கத்துறை வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்கக்கோரிய மனு திரும்ப பெறப்பட்டதை அடுத்து தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் ஆர்.அரவிந்த் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான அமலாக்கத்துறை வழக்கின் விசாரணையை சென்னை முதன்மை நீதிமன்றம் விசாரிப்பதற்கு அதிகாரமில்லை. எனவே, அந்த வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும்.

செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட போது உரிய விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை. எனவே, அதற்கு காரணமான அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த மனுக்கள் நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், எம்.ஜோதிராமன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, எதனடிப்படையில் இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதாக கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த மனுதாரர், செந்தில் பாலாஜிக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. அதற்காக தனிப்பட்ட முறையில் மனுத்தாக்கல் செய்துள்ளேன் என்று கூறினார்.

அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான சிறப்பு வழக்கறிஞர் என்.ரமேஷ், விசாரணை நீதிமன்றத்தில் வழக்கின் விசாரணை தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் வழக்குக்கு தொடர்பில்லாத நபர் இது போன்ற மனுக்களை தாக்கல் செய்ய முகாந்திரம் இல்லை எனக்கூறினார். இதையடுத்து, இந்த மனுவை திரும்ப பெறவில்லை என்றால் அபராதம் விதிக்கப்படும் என நீதிபதிகள் எச்சரித்தனர். இதனையடுத்து, மனுவை திரும்ப பெற்றுக்கொள்வதாக கூறியதை அடுத்து வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.