Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் தலைமையில் நடைபெற்ற கதர் கிராமத் தொழில் வாரியத்தின் முன்னேற்றத்திற்கான ஆய்வுக் கூட்டம்

சென்னை: பால்வளத்துறை மற்றும் கதர்த் துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் தலைமையில் தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியத்தின் முன்னேற்றத்திற்கான ஆய்வுக் கூட்டம் இன்று 08.10.2024 குறளகத்தில் நடைபெற்றது.

தமிழ்நாடு முதலமைச்சரின் சீரிய தலைமையில், பொறுப்பேற்ற இவ்வரசு கதர் கிராமத் தொழில்கள் மற்றும் பனைப் பொருள் வளர்ச்சி வாரியத்திற்கு என சிறப்பான முத்தாய்ப்பான நல்ல பல திட்டங்களைத் தீட்டி கிராமப்புர கைவினைஞர்கள் மற்றும் பனைத்தொழிலாளர்களின் வாழ்வாதாரம் முன்னேற அரும்பாடுப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு முதலமைச்சரின் சீரிய வழிகாட்டுதலின்படி இயங்கிவரும் வாரியத்தின் செயல்பாடுகளில் நல்லதொரு முன்னேற்றம் ஏற்பட வேண்டும் என்று பால்வளத்துறை மற்றும் கதர் துறை அமைச்சர் அவர்களால் ஆய்வு செய்யப்பட்டது. இவ்வாய்வில் கதர் கிராமத் தொழில் பொருட்கள் மற்றும் பனைப் பொருட்களின் உற்பத்தி மற்றும் விற்பனையை ரூ.100 கோடிக்கு குறையாமல் மேற்கொண்டு வாரிய பணியாளர்கள் திறம்பட பணியாற்றி இந்நிதியாண்டில் இலக்கினை அடைய வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

வாரிய வருவாயினை அதிகரித்திட வாரிய கட்டுப்பாட்டிலுள்ள நிலங்கள் மற்றும் கட்டடங்களை வாடகை / குத்தகை விடுவதற்கான நடவடிக்கையினை உடன் மேற்கொள்ள வேண்டும் எனவும், வாரியத்தின் செயல்பாடுகளில் இந்நிதியாண்டிற்குள் நல்லதொரு முன்னேற்றம் அடைந்திட வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.

இக்கூட்டத்தில், தமிழ்நாட்டில் செயல்படும் 70 சர்வோதய சங்கங்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்ததோடு, சங்கங்களின் உற்பத்தி மற்றும் விற்பனையில் முன்னேற்றத்தினை அடைய வேண்டும் எனவும் அமைச்சர் அறிவுறுத்தினார்.

இவ்வாய்வில் கைத்தறி, கைத்திறன். துணிநூல் மற்றும் கதர்த் துறை அரசு செயலாளர் வெ.அமுதவல்லி. வாரியத்தின் தலைமை செயல் அலுவலர் முனைவர் ப.மகேஸ்வரி மற்றும் சர்வோதய சங்க நிர்வாகிகளும் கலந்து கொண்டார்கள்.