சென்னை: த.வெ.க. ஆட்சி இருக்கும் வரை தமிழ்நாட்டுக்கு விடிவே இல்லை என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மிகக் கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார். சென்னை அடையாறு இந்திரா நகர் பகுதியில் மைத்ரேயன் என்ற இளைஞர் பட்டப்பகலில் வெட்டிக் கொல்லப்பட்டார்.
ஜாமினில் வெளிவந்து காவல் நிலையத்தில் கையெழுத்துவிட்டு, தனது தந்தையுடன் ஆட்டோவில் திரும்பிக்கொண்டிருந்தபோது, இரு சக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர் கொண்ட கும்பல் ஆட்டோவை வழிமறித்து அவரை வெட்டிக் படுகொலை செய்தது.
மேலும் கொலையாளிகள் தாங்கள் செய்த கொலைச் சம்பவத்தை இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வீடியோவாக பதிவிட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோ செய்தியை தனது எக்ஸ் பக்கத்தில் ஷேர் செய்துள்ள மு.க.ஸ்டாலின், "சிறை, பள்ளி, சாலை, நீதிமன்றம் என எங்கும் பாதுகாப்பில்லை! இதைப் பற்றி எல்லாம் முதலமைச்சருக்கு அக்கறை இல்லை. அதிகாரிகளுக்கு வழிகாட்டுதல் இல்லை. குற்றவாளிகளுக்கு பயமில்லை. த.வெ.க. ஆட்சி இருக்கும் வரை தமிழ்நாட்டுக்கு விடிவே இல்லை!" என்று காட்டமாக விமர்சித்துள்ளார்.


