Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

உயரதிகாரிகள் முதல் தொடர்புடைய அனைவர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் : இளைஞர் அஜித் மரண வழக்கில் ஐகோர்ட் உத்தரவு!!

மதுரை : அஜித்குமார் கொலை வழக்கின் அனைத்து ஆவணங்களையும் நாளை மதுரை மாவட்ட நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷிடம் அளிக்க உயர் நீதிமன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் மடப்புரத்தைச் சேர்ந்த இளைஞர் அஜித்குமார், நகை திருட்டு தொடர்பான புகாரில் திருப்புவனம் போலீசாரால் விசாரிக்கப்பட்டார். இந்த விசாரணையின் போது அஜித்குமார் மரணமடைந்தார். இந்த சம்பவம் தொடர்பான வழக்கு இன்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், நீதிபதி மரியா கிளாட்அமர்வு முன்பு நடைபெற்றது.

அப்போது, திருப்புவனம் நீதிமன்ற நடுவர் வெங்கடாபதி பிரசாத், கோயில் உதவி ஆணையர், மதுரை ராஜாஜி அரசு மருத்துவக் கல்லூரி டீன் ஆகியோர் ஆஜராகினர். மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் சிசிடிவி காட்சிகளை கோயில் உதவி ஆணையர் தாக்கல் செய்தார். அஜித்குமார் உடலின் பிரேதப் பரிசோதனை இடைக்கால அறிக்கையை மருத்துவக் கல்லூரி டீன் தாக்கல் செய்தார். அஜித்குமாரின் உடலில் 44 காயங்கள் உள்ளதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து நடந்த வாதங்கள் பின்வருமாறு...

நீதிபதிகள் : பிரேத பரிசோதனை அறிக்கை அதிர்ச்சியாக உள்ளது. உடலின் ஒவ்வொரு பாகம் விடாமல் இளைஞர் அஜித்குமார் தாக்கப்பட்டு உள்ளார். சாதாரண கொலை வழக்கு போல் இல்லை; அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். பதவி ஆணவத்தில் இளைஞர் அஜித்குமாரை காவலர்கள் கடுமையாக தாக்கி உள்ளனர். இளைஞர் அஜித்தின் உடலில் எந்த உறுப்பையும் காவலர்கள் விட்டு வைக்கவில்லை. அஜித்குமார் இறக்கும் வரை, அவர் எதற்காக விசாரிக்கப்பட்டார் என்பதற்கு FIR பதிவு செய்யப்படவில்லை. நகை திருட்டு வழக்கில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யாதது ஏன்? யாருடைய உத்தரவினால் வழக்கு தனிப்படையிடம் ஒப்படைக்கப்பட்டது? தனிப்படையினர் யார் சொல்லி, எதன் அடிப்படையில் இந்த வழக்கை கையில் எடுத்தனர்?

தமிழக அரசு தரப்பு : இளைஞர் அஜித் மரண வழக்கில் அனைத்து உயரதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க தயாராக இருக்கிறோம். நடவடிக்கை தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய 2 நாட்கள் அவகாசம் வழங்க வேண்டும்.

நீதிபதிகள் : அஜித்குமாரை அடிப்பதற்காக பைப், கம்புகள், மிளகாய்ப் பொடிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அஜித்தின் தாயார் அளித்த புகார் தொடர்பாக இதுவரை வழக்கு பதிவு செய்யப்படவில்லை. அஜித் இறப்புக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு தருவதாக திருமண மண்டபத்தில் வைத்து சிலர் பேரம் பேசி உள்ளனர். லாக்-அப் மரணங்களை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டுமா?

தமிழக அரசு தரப்பு : இளைஞர் மரண வழக்கில் அரசு நேர்மையாக உள்ளது;யாருக்கும் சாதகமாக இல்லை. வழக்கை சிபிஐக்கு மாற்ற எந்த ஆட்சேபனையும் இல்லை.

நீதிபதிகள் : அஜித்குமார் கொலைச் சம்பவத்தில் இப்போது அரசு உரிய நடவடிக்கை எடுத்துள்ளது. ஆனால் இது போன்ற நிகழ்வுகள் இனிவரும் காலங்களில் நடக்கக் கூடாது.வருங்காலங்களில் எந்த இடத்திலும் காவல்துறையினர் இதுபோல நடந்து கொள்ளக்கூடாது.கல்வியறிவு அதிகமுள்ள தமிழ்நாடு போன்ற மாநிலத்தில், இதுபோன்ற நிகழ்வு ஆபத்தானது.

நீதிபதிகள் : இளைஞர் அஜித் மரணம் தொடர்பான சாட்சியங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டுள்ளன. நாட்கள் செல்ல செல்ல சாட்சியங்கள் அழிக்கப்பட வாய்ப்பு உள்ளது. சம்பந்தப்பட்ட இடத்தில் இருந்து ரத்த சாட்சியங்கள் நீக்கப்பட்டது ஏன்?. சம்பந்தப்பட்ட இடத்தில் சாட்சியங்களை சேகரித்தது யார்?. சாட்சியங்களை சேகரிக்காமல் எஸ்.பி. என்ன செய்து கொண்டிருந்தார்?. சாட்சியங்களை சேகரிக்காத எஸ்.பி. மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டியதுதான்.

நீதிபதிகள் : காவல் நிலையத்தில் எதுவுமே நடக்கவில்லை; ஆனால் காவல் நிலைய சிசிடிவியை காண்பித்துள்ளார்கள். சம்பவம் அனைத்தும் கோயிலில் நடந்துள்ளது; ஆனால் கோயில் சிசிடிவி காண்பிக்கப்படவில்லை. வழக்கை இப்படி கையாண்டால் குற்றவாளிகள் எப்படி தண்டிக்கப்படுவார்கள்?. ஏன் வழக்கை முறையாக கையாளவில்லை; இவ்வாறு இருந்தால் விசாரணை எவ்வாறு நடைபெறும்?.

நீதிபதிகள் : இளைஞர் அஜித் மரண வழக்கு தொடர்பாக சிபிசிஐடி சிறப்புக் குழு விசாரணைக்கு உத்தரவிடுகிறோம். உயரதிகாரிகள் முதல் தொடர்புடைய அனைவர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். சிபிசிஐடி சிறப்புக் குழு நியாயமான விசாரணை நடத்தவேண்டும். வழக்கை அரசு உணர்வுப்பூர்வமாக எடுத்துக் கொள்ளவேண்டும். வழக்கு தொடர்பான அனைத்து சிசிடிவி காட்சிகளையும் பாதுகாக்க வேண்டும். எந்த மாற்றமும் செய்யக் கூடாது.

நீதிபதிகள் : அஜித்குமார் கொலை வழக்கை மதுரை மாவட்ட நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் விசாரணை செய்ய வேண்டும். அஜித்குமார் கொலை வழக்கின் அனைத்து ஆவணங்களையும் நாளை மதுரை மாவட்ட நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷிடம் அளிக்க உத்தரவிடுகிறோம். இவ்வழக்கில் முழுமையான விசாரணையை நீதிபதி ஜான் சுந்தர்லால் தொடங்க வேண்டும். முதற்கட்ட இடைக்கால அறிக்கையை வரும் 8ம் தேதி தாக்கல் செய்ய வேண்டும்.

இவ்வாறு வாதங்கள் நடைபெற்று வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.