குமரி: கன்னியாகுமரியில் ரோந்து பணியில் இருந்த உதவி ஆய்வாளர் ஒருவரை வெட்ட முயன்ற இளைஞர் கைது செய்யப்பட்டு உள்ளார். ரோந்து பணியில் இருந்த உதவி ஆய்வாளர் லிபி பால்ராஜை, வெட்ட முயன்ற இளைஞர் ஜெப்ரின் கைது செய்யப்பட்டுள்ளார்.
கன்னியாகுமரி பகுதியில் காவல் துறையினர் வழக்கமான ரோந்து மற்றும் தணிக்கைப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு பணியில் இருந்த உதவி ஆய்வாளர் லிபி பால்ராஜ் என்பவரை, ஜெப்ரின் என்ற வாலிபர் திடீரென அரிவாளால் வெட்ட முயன்றுள்ளார்.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சக போலீசார் அவரை உடனடியாக மடக்கிப் பிடித்து கைது செய்தனர். இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டு, உதவி ஆய்வாளர் லிபி பால்ராஜ் காயங்கள் ஏதுமின்றி தப்பினார். போலீஸ் தன்னை தடுத்து நிறுத்தி விசாரித்ததை அவமானமாகக் கருதிய இளைஞர் ஜெப்ரின், ஆத்திரமடைந்து மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து திடீரென உதவி ஆய்வாளர் லிபி பால்ராஜை வெட்டப் பாய்ந்ததாக அவரிடம் நடத்தப்பட்ட ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
தன்னை விசாரித்ததால் ஏற்பட்ட ஆத்திரத்தில் உதவி ஆய்வாளரையே அரிவாளால் வெட்ட முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல், கொலை முயற்சி மற்றும் பயங்கர ஆயுதங்களுடன் பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் கன்னியாகுமரி போலீசார், ஜெப்ரின் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.



