Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

ஜேஇஇ 2ம் கட்ட முதன்மைத் தேர்வு முடிவுகள் வெளியீடு: 24 பேர் 100% மதிப்பெண் பெற்று சாதனை

சென்னை: ஜே.இ.இ. 2ம் கட்ட முதன்மைத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகி உள்ளன. இந்த தேர்வில் 2 பெண்கள் உள்பட 24 பேர் 100% மதிப்பெண் பெற்றுள்ளனர். ஐஐடி, என்ஐடி போன்ற ஒன்றிய உயர்க்கல்வி நிறுவனங்களில் இளநிலை படிப்புகளில் சேர ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வில் (ஜேஇஇ) தேர்ச்சி பெறுவது அவசியம். ஜேஇஇ முதன்மைத் தேர்வு, பிரதானத் தேர்வு என இரு பிரிவாக நடைபெறும். இதில் முதன்மைத் தோ்வு தேசிய தேர்வு முகமை (என்டிஏ) சார்பில் ஆண்டுதோறும் 2 கட்டங்களாக நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி 2025-26-ம் கல்வியாண்டுக்கான ஜேஇஇ முதல்கட்ட முதன்மை தேர்வு கடந்த ஜன. 22 முதல் 30 வரை நடத்தப்பட்டது. இதனை சுமார் 13 லட்சம் பேர் வரை எழுதினர். இதன் முடிவுகள் பிப்ரவரி 11ம் தேதி வெளியானது. இந்த நிலையில், ஜேஇஇ 2ம் கட்ட முதன்மைத் தேர்வு ஏப். 1 முதல் 8ம் தேதி வரை நடைபெற்றது. இந்தத் தேர்வு தமிழ், ஆங்கிலம், ஹிந்தி உள்பட 13 மொழிகளில் நடத்தப்படுகிறது. இந்த தேர்வுக்கான முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன. இதற்கான இறுதி விடைக்குறிப்பு நேற்று வெளியிடப்பட்ட நிலையில், தற்போது முடிவுகள் வெளியாகியுள்ளது.

2ம் கட்டத் தேர்வின் முடிவுகள் https://jeemain.nta.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. முகப்பு பக்கத்தில் Results for JEE(Main) 2025 Session-2 is LIVE! என இடம்பெற்று இருக்கும். அதனை கிளிக் செய்து விண்ணப்ப எண், பாஸ்வோர்டு ஆகியவற்றை உள்ளிட்டு முடிவுகளை அறிந்துகொள்ளலாம். மேலும், கட்-ஆஃப் மதிப்பெண்கள், தரவரிசை பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் தேசிய அளவில் 24 மாணவர்கள் முழு மதிப்பெண்கள் பெற்று சாதித்துள்ளனர்.

இதில் தமிழ்நாட்டில் இருந்து ஒருவரும் இடம்பெறவில்லை. ராஜஸ்தான், மேற்கு வங்காளம், மகாராஷ்டிரா, குஜராத், டெல்லி, உத்தரபிரதேசம், தெலுங்கானா, ஆந்திரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் இருந்து மாணவர்கள் முழு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். தேசிய அளவில் முதல் இடம்பிடித்தவர்களின் மேற்கு வங்காளத்தை சேர்ந்த தேவ்துத்த மஜ்ஹி என்ற மாணவியும், ஆந்திர பிரதேசத்தை சேர்ந்த சாய் மனோக்னா குதிகொண்டா என்ற இரண்டு மாணவிகள் இடம்பெற்று சாதித்துள்ளனர். மாநில அளவிலான தரவரிசை பட்டியலில் தமிழ்நாடு அளவில் பிரதீஷ் காந்தி என்ற மாணவர் 99.9 மதிப்பெண்களுடன் முதல் இடம்பிடித்து அசத்தியுள்ளார்.