Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஈரான் மீது 2வது நாளாக இஸ்ரேல் விமானப்படை தாக்குதல் நடத்தியதால் போர் பதற்றம் அதிகரிப்பு

டெஹ்ரான்: ஈரான் மீது 2வது நாளாக இஸ்ரேல் விமானப்படை தாக்குதல் நடத்தியதால் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இஸ்ரேல் – ஹமாஸ் இடையே நடந்து வரும் மோதலில் ஹமாஸின் முக்கிய தளபதிகள் பலர் கொல்லப்பட்டனர். இதனிடையே, ஹமாஸுக்கு ஆதரவாக ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா உள்ளிட்ட அமைப்புகள் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திவந்தது. இந்த அமைப்புகளை குறிவைத்தும் இஸ்ரேல் ராணுவ நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றது. இதனிடையே ஈரானின் அணுசக்தி உற்பத்தியை கட்டுப்படுத்துவதற்கான ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்காக அமெரிக்க அரசு கடந்த சில நாட்களாக ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. இந்த பேச்சுவார்த்தையில் இதுவரை உடன்பாடு எட்டப்படவில்லை.

இதையடுத்து எந்த நேரத்திலும் ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தக்கூடும் எனக் கூறப்பட்டு வந்தது. இந்நிலையில், ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள ஏவுகணை உற்பத்தி தளம், அணுசக்தி நிலையங்களை குறிவைத்து நேற்று இஸ்ரேல் வான்வழித் தாக்குதலை தொடங்கியது. இதில் ஈரானின் முக்கிய அணு விஞ்ஞானிகள், ராணுவ தளபதிகள் பலியாகினர். பதிலடியாக ஈரானும் 100 டிரோன்கள் மூலம் தாக்குதலை தொடங்கியுள்ளது. இந்நிலையில் ஈரான் மீது 2வது நாளாக இஸ்ரேல் விமானப்படை தாக்குதல் நடத்தியதால் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. ஈரானில் உள்ள அணுசக்தி மையம், ராணுவ நிலைகளை குறி வைத்து இஸ்ரேல் விமானப்படை தாக்குதல் நடத்தியது. இஸ்ரேலின் தாக்குதலை அடுத்து தலைநகர் தெஹ்ரானில் வான் பாதுகாப்பு அமைப்புகளை ஈரான் நிறுத்தியுள்ளது.

இஸ்ரேல் விமானப்படை தாக்குதலுக்கு பதிலடியாக ஈரானும் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. இஸ்ரேலின் டெல் அவிவ் நகரை குறி வைத்து ஈரான் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. ஈரானில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணைகளை இடைமறித்து அழித்ததாக இஸ்ரேல் ராணுவம் தகவல் தெரிவித்துள்ளது. இஸ்ரேல், ஈரான் இடையிலான தாக்குதல் காரணமாக ஏர் இந்தியாவின் 12 விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது. ஏர் இந்தியாவின் 12 விமானங்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டதால் பயணிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

ஈரானுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை

இதனிடையே அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் என்று ஈரானுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். அழிவுகளை தவிர்க்க அணுசக்தி ஒப்பந்தத்தில் ஈரான் கையெழுத்திட வேண்டும். இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தினால் நாங்கள் அவர்களுக்கு பாதுகாப்பு அரணாக இருப்போம் என்றும் கூறியுள்ளார்.