சென்னை: சர்வதேச பயணிகள் வருகையில் சென்னையை பெங்களூரு சர்வதேச விமான முனையம் விஞ்சி விட்டது. சர்வதேச பயணிகளை கையாள்வதில் இதுவரை 3-வது இடத்தில் இருந்த சென்னை 4-ம் இடத்துக்கு சென்றுவிட்டது. 2025 ஏப்.-ஜூன் காலாண்டில் சென்னை விமான நிலையத்துக்கு 15.64 லட்சம் வெளிநாட்டு பயணிகள் வந்துள்ளனர். 2024 ஏப்.-ஜூன் காலாண்டுடன் ஒப்பிட்டால் இவ்வாண்டு சென்னை விமான நிலையத்தின் வளர்ச்சி 6 % ஆகும்.
வெளிநாட்டு பயணிகள் வருகை -பெங்களூரு 29% வளர்ச்சி
2025 ஏப்.-ஜூன் காலாண்டில் பெங்களூரு விமான நிலையம் 17.33 லட்சம் பயணிகளை கையாண்டுள்ளது. 2024 ஏப்.-ஜூன் காலாண்டைவிட பெங்களூருக்கு சர்வதேச பயணிகள் வருகை இவ்வாண்டு 29% அதிகரித்துள்ளது. சர்வதேச பயணிகள் வருகை மும்பை விமான நிலையத்தில் 4.5% டெல்லி விமான நிலையத்தில் 3% அதிகரித்துள்ளது. கேரளத்தின் கொச்சி விமான நிலையத்தில் சர்வதேச பயணிகள் வருகை கடந்த ஆண்டை விட 2.5% அதிகரித்துள்ளது.
சென்னை 4-வது இடத்தில் உள்ளது ஏன்?
சர்வதேச நாடுகளில் உள்ள பல நகரங்களுக்கு சென்னையில் இருந்து நேரடி விமான சேவை இல்லை. அதே நேரத்தில் பெங்களூருவில் இருந்து உலக நாடுகள் பலவற்றின் முக்கிய நகரங்களுக்கு நேரடி விமானம் செல்கிறது. முக்கிய நகரங்களுக்கு செல்லும் சர்வதேச பயணிகள் சென்னையில் இருந்து பெங்களூரு சென்று விமானத்தில் பயணம் செய்ய வேண்டிய நிலை உள்ளது. சென்னையில் இருந்து உலகின் முக்கிய நகரங்களுக்கு விமான சேவையை தொடங்கினால்தான் பயணிகளை கவர முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.